ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று (அக்டோபர் 25) களமிறங்குகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 3வது போட்டி, தொடரின் முடிவைத் தீர்மானிக்காவிட்டாலும், இந்தியாவுக்கு இது கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாக உள்ளது.
அதற்கான முக்கிய காரணங்கள் இதோ :
ஒயிட்வாஷ்’-ஐத் தவிர்ப்பதற்காக
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த போதிலும், ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையான தோல்வியைத் (Whitewash) தவிர்க்க வேண்டியது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.
இந்தியா, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை ஐந்து முறை மட்டுமே ‘ஒயிட்வாஷ்’ ஆகியுள்ளது. இளம் கேப்டன் சுப்மன் கில், தனது முதல் தொடரிலேயே இந்த மோசமான சாதனையை தவிர்க்க போராடுவார் என நிச்சயம் நம்பலாம்.
நம்பிக்கையை மீட்டெடுக்க…
ஆஸ்திரேலியாவில் அடைந்த தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, ஒரு வெற்றியைப் பெறுவது இந்திய அணியின் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இது வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்பாக அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வாய்ப்பு!
தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் (இரண்டு டக் அவுட்கள்) விராட் கோலி ஏமாற்றமளித்துள்ளார். இது அவரது 17 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அவரது மோசமான ஃபார்மை மாற்றவும், மீண்டும் ரன் குவிப்பைத் தொடங்கவும் இந்தக் கடைசிப் போட்டி அவருக்கு மிக அவசியமாகும்.
ரோஹித், கோலியின் கடைசி ஒருநாள் போட்டி?
தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும், 2027 உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே இறுதி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. எனவே, ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகம், இந்த ஜாம்பவான்கள் ஒரு வெற்றியுடன் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது.
உலகக் கோப்பைக்கு முந்தைய கடைசி ஒருநாள் போட்டி
இந்தத் தொடருக்குப் பிறகு, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடக்கும் தொடர் தான் இந்தியாவுக்கு உள்ளது. முன்னணி வீரர்கள் மற்றும் அணியின் ஒட்டுமொத்த கலவை மீது தற்போது இருக்கும் விமர்சனங்களைப் போக்க, இந்தப் போட்டியில் இந்திய அணி அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.

