மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க படத்தொகுப்பாளராக, வெற்றிகரமான இயக்குனராகத் திகழ்பவர் மகேஷ் நாராயணன். டேக் ஆஃப், மாலிக், அறியிப்பு படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி வருகிற திரைப்படம் ‘பேட்ரியாட்’. இதனைத் தொடர்ந்து, சல்மான்கானை நாயகனாகக் கொண்டு ’பேண்டம் ஹாஸ்பிடல்’ எனும் திரைப்படத்தை இந்தியில் இயக்கவிருக்கிறார்.
‘பேட்ரியாட்’ படத்தில் மம்முட்டி, மோகன்லால் நீண்டகாலம் கழித்து இணைந்து நடிக்கின்றனர். இவர்களோடு குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, ராஜிவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் என்று பெரும்பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
இந்த படத்தின் டீசர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
‘அவன்கிட்ட இந்த வாக்கியத்தை நிறைவு செய்யச் சொல்லு.. பெரிய இந்தியத் துரோகி அல்லது போராளி’ என்கிற வார்த்தைகளை மம்முட்டி மோகன்லாலிடம் சொல்வது போன்று இந்த டீசரில் ஓரிடம் வருகிறது. இன்னொரு இடத்தில் ‘அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா என்னாகும் தெரியுமா.. ப்ளாஸ்ட் தான்’ என்கிறார் பகத் பாசில்.
டெல்லி அரசியல், ரகசிய ஆபரேஷன், நீண்ட நாட்களாகக் காணாமல்போனவர்களாக அறியப்படும் முன்னாள் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள், தற்போது நடக்கிற ஒரு விபரீத நடவடிக்கை, அதற்கு எதிரான இளைய தலைமுறையினரின் செயல்பாடு என்று ஒரு ‘பொலிடிகல் ஆக்ஷன் த்ரில்லர்’ ஆக காட்சியளிக்கிறது ‘பேட்ரியாட்’ டீசர்.
சுஷின் ஷ்யாம் பின்னணி இசை, மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு எனப் பல அம்சங்கள் ஒன்றிணைந்து ‘இது மலையாளப் படம்தானா’ என்று கேட்கிற வகையில் இருக்கிறது ‘பேட்ரியாட்’ டீசர். நிச்சயமாக, இது ‘பான் இந்தியா’ ரிலீஸ்தான் என்று சொல்லத்தக்க வகையில் உள்ளது.
’பேட்ரியாட்’ படப்பிடிப்பு முடிவடைந்து இந்நேரம் அது தியேட்டர்களை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், மம்முட்டியின் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சிறு இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
‘அறியிப்பு’, ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி படத்திற்குப் பிறகு, கமல்ஹாசனை நாயகனாகக் கொண்டு ‘ராஜ்கமல்’ தயாரிப்பில் மகேஷ் நாராயணன் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்த கதை ‘பேட்ரியாட்’ தானா அல்லது சல்மான்கான் நடிக்க இருக்கிற ‘ஃபேண்டம் ஹாஸ்பிடல்’ படமா எனத் தெரியவில்லை.
ஒருவேளை ‘பேட்ரியாட்’ கமலுக்கு மகேஷ் சொன்ன கதையாக இருந்திருந்தால், தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பேரிழப்புதான். இந்த கதையில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்படி தமிழ் சினிமா ரசிகர்களைச் சமூகவலைதளங்களில் புலம்ப வைத்திருக்கிறது ‘பேட்ரியாட்’..!