கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க லோகா படத்தின் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தின் சூப்பர் ஹீரோ யார் என்ற அறிமுக வீடியோ இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது.
டொமினிக் அருண் இயக்கத்தில் தனது வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனத்தில் துல்கர் தயாரித்த திரைப்படம் லோகா அத்தியாயம் 1 – சந்திரா. நீலி என்ற சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.275 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன்மூலம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த 2வது திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
இதனையடுத்து லோகா அத்தியாயம் 2 குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. முதல் பாகத்தில் ஏற்கெனவே மைக்கேலாக டொவினோ தாமஸும், சார்லியாக துல்கர் சல்மானும் திரையில் தோன்றினர். அதன்படி 2ஆம் பாகத்தில் இரண்டு சூப்பர் ஹீரோவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் லோகா அத்தியாயம் 2 படத்தின் அறிமுக வீடியோவை வேஃபேரர் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி லோகா அத்தியாயம் 2 படத்தின் சூப்பர் ஹீரோ மைக்கேல் என்ற டோவினோ தாமஸ் தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் உதவி தேவைப்படும்போது சார்லி என்ற துல்கர் சல்மானும் வருவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.