’இட்லி கடை’ பட புரோமோஷனுக்காக சுற்றிச் சுழன்று ‘விசிட்’ அடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில், சமீபத்தில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அவரோடு அருண் விஜய் உட்பட அந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
’காதல் கொண்டேன்’ படம் முடிவடைகிற தருவாயில் ‘திருடா திருடி’ படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கியதாகவும், அதில் கலந்துகொண்ட நினைவுகள் தன் மனதில் மேலெழுவதாகவும் அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஐந்து நாட்கள் பகலில் ‘திருடா திருடி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு, இரவில் சென்னையில் நடக்கும் ‘காதல் கொண்டேன்’ படப்பிடிப்புக்காக காரில் பயணித்துச் சென்றதாகக் கூறினார்.
ஐந்து நாட்கள் அப்படித் தொடர்ந்து தான் பயணித்து படப்பிடிப்புகளில் மாறி மாறி பங்கேற்றதாகச் சொன்ன தனுஷ், அந்த உழைப்பால் தான் இன்று தான் வெற்றிகரமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வந்து, பிறகு அதுவே ‘நெகட்டிவ்’வாகி விடக் கூடாது என்று தனுஷ் நினைத்தாரா எனத் தெரியவில்லை. ‘இது ஒரு சாதாரண படம்’ என்று அளவாகப் பேசினார்.
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் புகழ் சுதாகர், கோபி, டிராவிட் செல்வம் ஆகியோர் தனுஷிடம் கேள்வி கேட்கிற நிகழ்வும் இதில் இடம்பெற்றது. ‘இட்லி கடை’ படமானது சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்வைத் தழுவியது என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
‘இது கோயம்புத்தூரைச் சேர்ந்த செஃப் ஒருவரது வாழ்க்கை கதை தான் இட்லி கடை’ என்று சொல்லப்படுகிறதே என்று தனுஷிடம் கேட்கப்பட, ‘இல்லைங்க, இது என்னோட கற்பனை கதை. நான் கிராமத்துல பார்த்த சில மனிதர்களைத்தான் இதுல கேரக்டர்களாக ஆக்கியிருக்கிறேன்’ என்று பதில் சொன்னார்.
’ஒல்லியாக இருப்பதே கிண்டலடிக்கப்படுகிற வழக்கம் ஒரு காலத்தில் இருந்ததாகவும், உங்களது வரவுக்குப் பிறகு அது ஒரு ப்ளஸ் ஆகிவிட்டதே’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆரம்பத்துல அது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்போ அப்படி எதுவும் இல்ல. இந்த கூட்டத்துல இருக்குற பலர் என்னை மாதிரிதானே இருக்காங்க’ என்று பதிலளித்தார் தனுஷ்.
’இட்லி கடை’ ஆடியோ வெளியீட்டு விழாவில், சிறு வயதில் தானும் தனது சகோதரிகள், சகோதர் நால்வரும் பூ பறித்து, அதில் கிடைத்த காசு கொண்டு இட்லி வாங்கி சாப்பிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் தனுஷ். அது சமூகவலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்யப்பட்ட நிலையில், அது பற்றியும் பதிலளித்தார்.
தான் 1983ஆம் ஆண்டில் பிறந்ததாகவும், தந்தை கஸ்தூரி ராஜா 1991இல் இயக்குனர் ஆனதாகவும், இடைப்பட்ட காலத்தில் வறுமையான சூழலிலேயே வளர்ந்ததாகவும் கூறினார். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் வசதியான வாழ்வு அமைந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்குப் பணக் கொடுக்கிற வழக்கம் இருந்ததால் தாங்கள் மேற்சொன்ன அனுபவங்களை எதிர்கொண்டதாக விளக்கம் தந்தார் தனுஷ்.