கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்றதும் பலரும் கொண்டாடினார்கள் . இளம் இயக்குநர்களின் படங்களில் ரத்தம் , குடல், போட்டி, தலைக்கறி, ஈரல் என்று பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார், சுந்தர் சி டைரக்ஷனில் நடித்தால், காமெடியில் அதகளம் செய்த பழைய ரஜினியைப் பார்க்கலாம் என்பது பலரின் ஆசை .
சாதாரண நடிகர்களை வைத்தே வெற்றி படங்கள் கொடுத்த சுந்தர் சி ரஜினியை மீண்டும் இயக்கினால் எப்படி இருக்கும்? அதில் கமலின் கையும் இருந்தால் ஆகா ஓகோதான் என்கிறார்கள் பலர்.
அந்தப் படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார் சுந்தர் சி. காரணம் ?
1) சுந்தர் சி ஃ பர்ஸ்ட் காப்பி முறையில் படம் எடுத்துத் தருவதாக சொன்னார் (அதாவது இயக்குனரிடமே தயாரிப்பதற்கான முழுத் தொகையை கொடுத்து விடுவது. அவர் படத்தை அந்த தொகைக்குள் முடிப்பது) . ஆனால் கமல் அதை விரும்பவில்லை.
2) பெரிய படம் என்பதால் சுந்தர் சி பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டார். அது கமலுக்குப் பிடிக்கவில்லை.
3) கமல் சில கதைகளை சொல்லி இதில் ஒன்றை எடுங்கள் என்றார். அது சுந்தர் சி க்கு பிடிக்கவில்லை (அப்படி போனால் மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமை சுந்தர் சி க்கு கிடைக்காது. கமலிடம்தான் இருக்கும் )
4) பதிலுக்கு சுந்தர் சி சொன்ன கதையை கமல் வேண்டாம் என்கிறார் .
5) இல்லை இல்லை சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்குத்தான் பிடிக்கவில்லை
6) ரெண்டு பேருக்குமே அந்தக் கதை பிடிக்கவில்லை.
7) அருணாசலம் படத்தின் போது சுந்தர் சி ரஜினி இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள்தான் காரணம் (அருணாசலம் படத்தின் இறுதியில் போடப்பட்ட மேக்கிங் வீடியோவில் ரஜினி முகத்தருகில் சுந்தர் சி விரலை வைத்து சதுரமாக வரைந்து குளோசப் என்று சொல்வார். அவர் அப்படி காட்டும்போது ரஜினி முகம் சீரியஸ் ஆவதை அந்தக் காட்சியிலேயே பார்க்கலாம் ). சுந்தர் சி யைக் கொண்டு வந்தது கமலின் பிளான்தான் என்று பல தகவல்கள் உண்டு . இவற்றில் ஒரு சிலவோ அல்லது எல்லாமோ உண்மையாக இருக்கலாம்.
கடைசியாக கமல் . ” என் ஹீரோவுக்கு பிடித்த கதையைதான் நான் எடுக்க முடியும்” என்று சொன்னது கூட சுந்தர் சி யை விலக்கி வைத்துப் பேசியது போலவே இருந்தது .
இந்த நிலையில் மேற்படி கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.
அப்பா அது நல்ல குடும்பப் படம்தான். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்
– ராஜ திருமகன்
