சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் பரவிய நிலையில் இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
நவீன இயந்திர உலகில் மக்களின் சொகுசு பயணத்துக்காகவும், விரைவான பயணத்துக்காகவும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை முதன்மையாக மாறிவிட்டது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 25) டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிலோமீட்டரை பொறுத்து ரூ.1 முதல் ரூ.4 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையம் செல்லும் வழித்தட டிக்கெட்டுகள் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
இதைதொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விலையும் உயர்த்தப்படும் என்ற தகவல் பரவிய நிலையில் இதுதொடர்பாக சிஎம்ஆர்எல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளது.
அதுபோன்று தமிழ்நாடு உண்மை அறியும் குழுவும் கட்டண உயர்வு என்ற செய்தியை மறுத்துள்ளது.
“டெல்லியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மெட்ரோ ரயில் பயணத்திற்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான செய்தியில், சென்னை மக்கள் ஷாக் என்று தவறான தலைப்பை வைத்து செய்தி பகிரப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஒரே மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.