இந்துத்துவத்தின் பிடியில் பாலிவுட்?

Published On:

| By Minnambalam Desk

Is Bollywood in the grip of Hindutva? Arjun Rampal

அர்ஜுன் ராம்பாலின் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கம் பாலிவுட் ரசிகர்களை ஏன் கவலையடையச் செய்ய வேண்டும்?

ஷோபா டே

மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் இரவில், நடிகர் அர்ஜுன் ராம்பால் தனது ஏற்புரையை முடிக்கும்போது ஆவேசமாக எழுப்பிய முழக்கம் – ‘பாரத் மாதா கி ஜெய்!’

ADVERTISEMENT

திகைத்துப் போயிருந்த பார்வையாளர்களில் ஒரு சிலர் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் கைதட்டினர். அதற்கு முன்னதாக, துரந்தர் படத்தின் முதல் பாகத்தில், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காட்சியைப் படமாக்கியபோது தான் அனுபவித்த மனவலியைப் பற்றி அவர் உருக்கமாகப் பேசினார். அந்தப் படத்தில் அவர் மேஜர் இக்பால் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்; அந்தத் தாக்குதலைப் பின்னணியில் இருந்து இயக்கும் ஒரு நிழல் உலக பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ முகவர் அவர்.

ராம்பாலின் பிறந்தநாளும் அந்தத் துயரமான தேதியிலேயே வருகிறது… அந்தப் பயங்கரமான இரவில் மும்பை குண்டுவெடிப்புகளால் சிதறியபோது, தான் இதே ஹோட்டலில்தான் கொண்டாட்டத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த நினைவுகள் நெஞ்சை அடைக்க, கண்கள் பனிக்க, தனது விருதை வானை நோக்கி உயர்த்திப் பிடித்து ‘பாரத் மாதா கி ஜெய்!’ என்று முழக்கமிட்டார்.

ADVERTISEMENT

துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் இறுதிக் காட்சியில், மேஜர் இக்பால் கதாபாத்திரம் கொல்லப்படுவதற்குச் சற்று முன்பு “பாகிஸ்தான் வாழ்க” என்று கத்தும். மேடையில் ராம்பால் எழுப்பிய முழக்கம், ஒருவேளை அந்தத் திரை வசனத்திற்காக அவர் செய்த பரிகாரமாக இருக்கலாம்.

அந்த நிகழ்வில் திரையரங்கிலும் ஓடிடி தளங்களிலும் சாதித்ததற்காக விருது பெற்ற இன்னும் பல நடிகர்கள், துரந்தர் போன்ற தீவிரத் தேசியவாதம் பேசும் பாலிவுட் படங்களில் நடித்தவர்களே. பார்வையாளர் வரிசையில் அனுபவம் வாய்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர்கள், இதர அரசியல் பின்னணி கொண்ட திரையுலக தேசபக்தர்களான அனுபவம் கெர், ரவீணா டாண்டன் (அவரது மகள் ராஷாவிற்கு விருது வழங்கப்பட்டது) போன்றோர் இருந்தனர். அந்த அழகிய ஹாலில் ஒட்டுமொத்தச் சூழலும் மிக இணக்கமாகவும் வசதியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

இத்தகைய நாகரிகமான மனிதர்கள் நிறைந்த சபையில், அரசியல் ரீதியாக ஒத்த கருத்துடையவர்கள் ஷாம்பெயின் கோப்பைகளைத் தட்டியபடி அந்த மாலை நேரத்தைக் கொண்டாடுவதில் உள்ள ‘நெருக்கத்தைப்’ பற்றிப் பேசுவது அநாகரிகமாக இருந்திருக்கும். ஆனால், வெகுநேரம் கழித்துத்தான் ஒரு சிந்தனை மேலோங்கியது – யாரும் கவனிக்காத நேரத்தில் பாலிவுட்டின் ‘இந்துத்துவச் செயல்திட்டம்’ நமக்குள் எப்படித் திருட்டுத்தனமாக நுழைந்தது? இவ்வளவு காலமும் நாம் கண்களை மூடிக்கொண்டு இருந்தோமா? அல்லது இந்திய சினிமா எனும் வலிமையான அமைப்பின் ஓரத்தில் இருக்க விரும்பும் என்னைப் போன்றவர்கள் (சினிமாக்காரர்களைவிட) மிக அப்பாவித்தனமாக இருந்துவிட்டோமா?

எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள் வெளிப்படையான உண்மைகளைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்கிறார்கள். நேரடிப் பிரச்சாரப் படத்தைவிட, திறமையான இயக்குநர்களால் கதை வடிவில் வழங்கப்படும் அரசியல் புராணங்களும் பிரச்சாரங்களும் வெகுமக்களை மிக ஆழமாகச் சென்றடையும். ஆனால், இப்போது அவற்றுக்கிடையிலான கோடுகள் மறையத் தொடங்கிவிட்டன. “பொழுது போக்கு” என்பது இவ்வளவு திட்டமிட்டதாகவும் அப்பட்டமாகவும் மாறும்போது, அது பொதுமக்களின் கருத்தை மாற்றும் தன்மையை மெல்ல இழக்கத் தொடங்கும்.

ஆதித்ய தார் போன்றவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை. துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் கருத்துக்கள் மிகவும் திணிக்கப்பட்டவை; அண்மைக்கால வரலாற்றைச் சொல்லும் விதத்தில் அது ஆபத்தான முறையில் ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்தியாவின் விதியை ஒரு “சாய்வாலா” (Chaiwallah) ஒற்றை ஆளாக மாற்றியதாகக் காட்டப்படும் புத்திசாலித்தனமான (?) குறிப்புகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்ட பணமதிப்பிழப்பு (Demonetisation) கொள்கை குறித்த முழுமையான திரிபுகள் இந்தப் படத்தில் அரங்கேறியுள்ளன. துரந்தர் படத்தின் வளைக்கப்பட்ட கதையாடலில், பணமதிப்பிழப்பு என்பது பாகிஸ்தானின் பேரழிவுத் தாக்குதலிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தேசபக்தியின் உச்சக்கட்ட நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டைக் கைப்பற்றும் வலதுசாரிகள்

இந்துத் தேசியவாதக் கருப்பொருளை மிகைப்படுத்திக் காட்டும் படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன; இது “நவ இந்தியாவின்” அபிலாஷைகளைப் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் இத்தகைய படங்களின் ரசிகர்கள். அவர்கள் சொல்வது தவறில்லை. கதர் 2 (2023), தி காஷ்மீர் ஃபைல்ஸ் (2022), தி கேரளா ஸ்டோரி (2023) போன்ற படங்களின் வெற்றி, மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள வலுவான மாற்றத்தைக் காட்டுகிறது. பாகிஸ்தானையும் பாகிஸ்தானியர்களையும் அரக்கர்களாகச் சித்தரிப்பதும், பாகிஸ்தானை உலகின் முதல் நிலை பயங்கரவாத நாடாக அறிவிப்பதும் இந்திய ரசிகர்களிடையே நன்றாக எடுபடுகிறது.

இந்திய உளவாளிகள் அந்த ‘துரோகி’ எதிரிகளைச் சித்திரவதை செய்து துவம்சம் செய்யும் இரத்தக் களறியான காட்சிகளைக் கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். பல காட்சிகளில் இந்திய உளவாளிகள் எதிரிகளைவிடக் கொடூரமாகச் செயல்படுகிறார்கள். இந்த அநாவசியமான வன்கொடுமைகள் அனைத்தும் “தேசபக்தி”, இந்தியாவின் மீதான அன்பு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றன.

வலதுசாரிகள் பாலிவுட்டை ஆக்கிரமிப்பது அச்சமூட்டுகிறது. இந்தத் திட்டம் மறைமுகமானது அல்ல. அது அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. இந்தச் சித்தாந்தத்தை ஏற்காத அனைவரையும் ஒதுக்கிவைக்கும் வகையில் கதையாடல்கள் கையாளப்படுகின்றன; மாற்றியமைக்கப்படுகின்றன. மாறாக, இதை ஏற்றுக்கொள்பவர்களுக்குப் பெரும் சன்மானங்கள் கிடைக்கின்றன.

அக்ஷய் குமாரின் படங்கள் – கேசரி (2019) முதல் மிஷன் மங்கல் (2019) வரை – தற்போதைய ஆட்சியின் நேரடி அங்கீகாரமாகவே உள்ளன. அங்கு ஒரே ஒரு உண்மையான ‘மிஷன்’ தான் இருக்கிறது; அது ‘நவ பாரதம்’ குறித்த செய்தியைப் பரப்புவது. இஸ்லாமோஃபோபியா (இஸ்லாத்தை அச்சுறுத்தலாகப் பார்ப்பது), அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை பொழுதுபோக்கின் மாயாஜாலத்தைத் திட்டமிட்டுச் சிதைக்கின்றன.

விரைவில், நமது மூன்று சூப்பர் ஹீரோக்களான ‘கான்கள்’ மெல்ல ஓரங்கட்டப்படுவார்கள். தில்லியின் அரசியல் கட்டளைகளுக்கு இணங்கி நடக்கும் நடிகர்களையே தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யத் தொடங்குவார்கள். இந்த மாற்றம் “இயல்பானது” போலக் காட்டுவதற்காக மிக மெதுவாக நடக்கும் (“கான்களுக்கு வயதாகிவிட்டது… அவர்களின் படங்கள் இனி வசூல் தருவதில்லை…” என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படும்).

இந்துத்துவ ஆதரவு நபர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களுக்குப் பெருநிறுவனங்களும் ஸ்டுடியோக்களும் ஏற்கனவே முன்னுரிமை அளிக்கத் தொடங்கிவிட்டன. இந்த செல்வாக்கு மிக்க வட்டங்களுக்கு வெளியே இருக்க விரும்புபவர்களின் குரலை நெரிப்பது அவர்களுக்குப் பெரிய விஷயமே அல்ல. 

பொதுமக்களுக்காக அரசியல் புராணங்களை உருவாக்கும் இயக்குநர்களிடம் தங்கள் விசுவாசத்தைக் காட்ட, விருது வழங்கும் விழா போன்ற மேடைகளை நட்சத்திரங்கள் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். விழிப்புணர்வுள்ள ரசிகர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், இத்தகையவர்களைச் சுட்டிக்காட்டவும் வேண்டிய நேரம் இது.

அதுவரை, திரைப்பட விருதுகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படலாம்: ஒளிரும் கோப்பையைக் கையில் ஏந்தி, ஸ்பாட்லைட் வெளிச்சத்தில் “பாரத் மாதா கி ஜெய்!” என்று நடிகர்கள் அனைவரும் கோரஸாக முழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படலாம்.

கட்டுரையாளர்: ஷோபா டே, எழுத்தாளர், சமூக-அரசியல் விமர்சகர். 20 நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.

நன்றி: தி பிரிண்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share