தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தயாராகி வருகின்றனர். நீண்ட தூரம் பயணிப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளியை கொண்டாடச் செல்லும் மக்களுக்காக ரயில்வே நிர்வாகம் ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. பெரும்பாலான ரயில்களுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்த நிலையில், கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்கள் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று காலை தட்கல் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய லட்சக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தியதால், இணையதளம் முடங்கியது. இதனால் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவோ அல்லது ரத்து செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இணையதளத்தை பயன்படுத்த முடியாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தட்கல் டிக்கெட் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.