போர்க்களமும், தேர்தல் களமும்: மானுடத்தின் எதிர்காலம் என்னவாகும்?

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை

கடந்த வாரம் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு முரண்பாடான சூழ்நிலை உருவாகியது. அது என்னவென்றால் பெரும்பாலோரின் கவனம் உள்ளூர் அரசியல், நெருங்கிவரும் தேர்தல், அதன் அணிசேர்க்கை ஆகியவற்றைக் குறித்தே இருந்தது. ஆனால் உலக அரசியல் நிலையோ பெரும் பதட்டத்திற்கு உரியதாக இருந்தது. ஏனெனில் கிட்டத்தட்ட மூன்றாம் உலகப் போரே உருவாகலாம் என்னுமளவு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த போரின் விளைவுகள் மிகுந்த அழிவினை தோற்றுவிப்பதாக இருந்தன. 

அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்ததற்கு மாறாக ஈரானின் தலைவர் கமேனியைக் கொன்றதால் இஸ்லாமியக் குடியரசு வீழ்ந்துவிடவில்லை. மாறாக ஆட்சியாளர்கள் பெருமளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்கள். கமேனியின் மகன் தலைவராகியுள்ளார். ஈரான் கடுமையான எதிர்த்தாக்குதலை அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தொடுத்து வருகிறது. போர் உக்கிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் போரின் தாக்கங்கள் இல்லாமல் இல்லை. எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்ததால் தேநீர்க் கடைகள், சிற்றுண்டிச் சாலைகள் பாதிக்கப்பட்டன. தொழில்கள் முடங்கின. பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு தோன்றவில்லையானாலும், அது குறித்த அச்சம் பரவலாக உள்ளதால், நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்காசியப் போர் குறுக்கிட்டாலும், அது எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாகவே பேசப்படுகிறது. சில எதிர்கட்சிகள் இந்த தட்டுப்பாட்டிற்கான பழியை அபத்தமாக மாநில அரசின் மீது சுமத்தி, தேர்தலில் ஆதாயம் தேடலாமா என நினைக்கின்றன.

ADVERTISEMENT

ஆளும் தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக தர்ணா போராட்டங்களை நடத்துகிறார்கள். இது முற்றிலும் பொருளற்றதல்ல. ஏனென்றால் இந்திய பெருமுதலீட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யாமல் உள்நாட்டிற்கு பயன்படுத்தும் முடிவை ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும். அதே போல, ஹோர்முஸ் நீரிணையை மறிக்கும் ஈரானுடன் பேசி, எரிவாயு கப்பல்கள் இந்தியாவிற்கு வர அனுமதியைப் பெற வேண்டும்.

ஆனால் பிரச்சினை எரிவாயு மட்டுமல்ல. போரின் தீவிரம் அதிகரித்தால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும். போர்க்களம் உலக நாடுகள் பலவற்றிற்கும் விரிவடைந்தால், அது இந்தியாவையும் நேரடியாக பாதிக்கும், உள்ளிழுக்கும் சூழல்கள் உருவாகலாம். ஏனென்றால் இந்த போரே ஏவுகணைப் போராக உள்ளது. அமெரிக்க வர்த்தக நலன்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவை தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

ADVERTISEMENT

தமிழ் பொதுமன்றம் இந்த பிரச்சினையை புரிந்துகொள்ள, விவாதிக்கக் கடமைப்பட்டுள்ளது. முக்கியமான கேள்வி ஏன் மக்களாட்சிக் குடியரசுகளால் போரில்லாத உலக ஒழுங்கை உருவாக்க முடிவதில்லை என்பது. அதனைச் சிந்திக்கும்போதுதான் குடியரசு விழுமியங்களைக் காப்பது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.

எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையிலிருந்து தொடங்கினாலும் அதன் பின்னால் உள்ள காரணங்களை பொதுமன்றத்தில் ஆராய்வது மிகவும் அவசியமானது எனலாம்.

அதைச் செய்வதன் பொருட்டு நாம் மூன்று பகுதிகளாக இந்த கட்டுரையை பிரித்துக் கொள்ளலாம். முதலில் மக்களாட்சிக் குடியரசுகளின் சர்வதேச ஒழுங்கு எப்படியிருக்க வேண்டும் என்று சிந்தப்பது. இரண்டாவது,  எப்படி உள்நாட்டு முரணரசியல் உருவாக்கும் தேர்தல் களம், போர்க்களத்திலிருந்து வேறுபட்ட து என்பதைப் பரிசீலிப்பது. மூன்றாவது, தமிழ்நாட்டு தேர்தல் கள முரணரசியலுக்கும் சர்வதேச போர்க்களத்திற்கும் உள்ள தொடர்பை விவாதிப்பது.

மக்களாட்சிக் குடியரசுகளின் கூட்டமைப்பாக உலகம்  

மனிதர்கள் விலங்குகளிடமிருந்து பல விதங்களில் வித்தியாசப்படுவதாகத் தோன்றும். ஒரு சிலர் இல்லை முக்கியமான வாழ்வியல் அம்சங்களில் மனிதர்களும் விலங்குகள் போலத்தான் என்று கூறுவார்கள்.

உணவு, இனப்பெருக்கம், மரணம் என்ற அடிப்படை அம்சங்கள்தான் மானுட வாழ்வும் என்பதால் மனிதர்களும் விலங்குகள்தான் என்பது வெளிப்படையானது. ஆனால் சற்றே வித்தியாசமான விலங்கு. அதன் நரம்பு மண்டலம் பெற்ற வளர்ச்சியால் அதற்கு நினைவாற்றல் அதிகரித்து விட்டது. அதனால் உடல் நினைவுசேகரத்தை உருவாக்கி, தன் உடலிலிருந்தே விலகிய தன்னுணர்வைப் பெற்றது.

இந்த விலகிய தன்னுணர்வின் காரணமாக தன் உடலையே கொன்று சிதைத்துக் கொள்வதும், சக மனிதர்களைக் கொல்வதும் சாத்தியமாகியது. தன்னுணர்வு உடலில் இயங்கும் உயிர்ச்சக்தியை ஆன்மா என்று உருவகம் செய்தது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழியாது என்றும், அது மீண்டும் பிறக்கும் என்றும் கற்பிதம் செய்வது சாத்தியமானது.

கர்ணன் (1964) திரைப்படத்தில் கண்ணனின் கீதை வரிகளை பாடலாக மாற்றியிருப்பார்கள். “மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்! மானிடர் ஆன்மா மரணமெய்யாது! மறுபடி பிறந்திருக்கும்!” என்றும் “மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்! வீரத்தில் அதுவுமொன்று! நீ விட்டுவிட்டாலும் ஓர்நாள் வெந்துதான் தீரும்!” என்றும் அந்த பாடல் வரிகள் போர் புரிவதை, எதிரிகளைக் கொல்வதை நியாயப்படுத்திப் பாடும்.

விலங்குகள் தான் உண்ணக்கூடிய பிற விலங்குகளை பசித்தால் கொல்லும். மானை புலி வேட்டையாடிக் கொன்று தின்னும். ஆனால் ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்லாது. மனிதர்கள் அப்படியல்ல. ரோமப் பேரரசில் கேளிக்கைக்காகவே மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொல்லும்படி விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டது மிகவும் பிரபலமானது.

இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்தித்தால், கொலை சாத்தியமானபோது ஆதிவாசிக் குழுக்கள் தங்கள் குழுவிற்குள் யாரும் பிறரைக் கொல்லக்கூடாது என்றும். பிற குழுவினரைக் கொல்லலாம் என்றும் எதிரி, நண்பன் பாகுபாடு துவங்கியதை முரணரசியலின் ஆதிவடிவமாகப் பார்க்கலாம்.

அப்படியான குழுக்கள் ஒருங்கிணைக்கப் பட்டபோதுதான் அரசர்கள், பேரரசர்கள் என்பன போன்ற தலைமைப் பதவிகள் உருவாயின. ஒரு குழுவினுள், நாட்டினுள் ஒருவரை ஒருவர் கொல்லக் கூடாது. அப்படி ஒருவர் தவறு செய்தால் அவரைக் கொல்லும் அதிகாரம் அரசனுக்கே உண்டு. அதுதான் இறையாண்மையின் அச்சாரமாகியது. இன்றுவரை பல அரசுகள் மரண தண்டனை என்ற பெயரில் சட்டப்படி கொலை செய்து வருகின்றன.

அதே போல மன்னர்கள் பிற நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டின் வீரர்களையும், ஏன் மக்களையும் கூடக் கொல்லலாம் என்ற உரிமையும் வழங்கப்பட்ட து. அது வீரம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு அரசன் பேரரசன் ஆகவேண்டும் என்றால், பிற அரசர்களுடன் போரிட்டு அவர்களை தனக்குக் கீழ்படியச் செய்து, அவர்களின் உபரிகளை கையகப்படுத்திதான் பேரரசனாக முடியும்.

அவ்வாறு உருவாகும் பேரரசு உபரிகளைக் குவித்து, அதன்மூலம் பல கட்டமைப்புகளை உருவாக்குவது மானுட வாழ்வை மேம்படுத்துவதாகக் கருதப்பட்டது. ஒரு பேரரசின் கட்டுப்பாட்டில் பெரியதொரு பரப்பு வரும்போது அதனுள் அடங்கியுள்ள குறுநில மன்னர்களுக்கிடையே போர்கள் தவிர்க்கப் படுகின்றன என்பதால் சமூக வாழ்வில் அமைதி நிலவுகிறது. இதனால் ஒரு உலகப் பேரரசை உருவாக்கினால் மானுட வாழ்வை பெருமளவு மேம்படுத்தலாம் என்ற எண்ணமும் பலருக்கு தோன்றுத்தான் செய்தது.

ஆனால் இந்த முயற்சிகளெல்லாம் போர்களை அதிகரித்தனவே தவிர குறைக்கவில்லை. அப்படியே ஒரு பேரரசு உருவாகி ஒரு சில நூற்றாண்டுகள் நிலவினாலும், அவை உட்பகை, வெளிப்பகை ஆகியவற்றால் சிதைவுற்றன. அரசன்/அரசி என்ற தனி நபரை இறையாண்மையின் வடிவமாக பார்க்கும்போது பலர் எதேச்சதிகாரிகளாகவும், சர்வாதிகாரிகளாகவும் மாறி கொடுங்கோல் ஆட்சி செய்யத் துவங்குவதும் இயல்பாக மாறியது.

பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தோன்றி, நூல்களை மக்கள் பரவலாக வாசிப்பது சாத்தியமானபோது, குடியரசு குறித்த சிந்தனைகள் வலுவடைந்தன. மன்னர்கள் சட்டத்தின்படியே ஆட்சி செய்ய வேண்டும் என்பதும், அவர்கள் பல்வேறு ஆலோசனை அவைகளுக்குக் கட்டுப்பட்டுதான் செயல்பட வேண்டும் என்பதும் நடைமுறைக்கு வந்தது. இதன் அடுத்த கட்டமாக மக்கள் பிரதிநிதிகளின் அவை என்ற சிந்தனையும் உருவானது.

இப்படியாக உலக நாடுகளெல்லாம் மக்களாட்சிக் குடியரசுகளாக மாறிவிட்டால், அனைத்திலும் சட்டங்களின்படி சமூக வாழ்வு இயங்கத் துவங்கிவிட்டால், அதன் தொடர்ச்சியாக அந்த மக்களாட்சிக் குடியரசுகளின் உறவுகளும் சர்வதேச சட்டங்கள், விதிமுறைகளின்படி உருவாகிவிடும் என்பதால் உலகில் போர் என்பதற்கே தேவையிருக்காது என்ற எண்ணமும் பிறந்தது.

உள்நாட்டு முரணரசியல்

மக்களாட்சிக் குடியரசுகள் அரசியலமைப்பு சட்டப்படி இயங்கினாலும், ஆட்சிப் பொறுப்பில் யாராவது அமரவேண்டும் என்பது இன்றியமையாதது. அப்படி ஆட்சியாளர்கள் உருவாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும்போது, அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் உருவானார்கள்.

அவ்வாறு உருவான கட்சிகளும், தலைவர்களும் தேர்தல் களத்தில் கடுமையாக முரணுற்று மோதினாலும் அதில் வன்முறைக்கு வேலையில்லை. ஏனெனில் யார் வெற்றி பெற்றாலும், குடியரசின் சட்டங்களின்படிதான் ஆட்சி நடக்கும். வரி விதிப்பின் மூலம் திரட்டப்படும் உபரி, அனைத்து மக்களின் நன்மைக்கும் செலவழிக்கப்படும். அதனால் தேர்தல் கள முரணரசியல் என்பது போர்க்களம் போல கொலைக்களம் அல்ல. கருத்துக்களின் மோதல் களம் மட்டுமே எனலாம்.

இவ்வாறான இலட்சிய சமூகம் உருவாக எது தடையாக மாறுகிறது என்றால், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுதான். முதலீட்டிய உற்பத்தி முறை தொடர்ந்து ஏற்றத்தாழ்வை அதிகரிக்கக் கூடியது என்பதால், உபரிகளை பகிர்ந்து கொள்வதில் மக்கள் தொகுதிகளிடையே முரண்கள் அதிகரிக்கின்றன. இது உள்நாட்டு முரணரசியலில் வன்முறையை புகுத்துகின்றது.

அந்த வன்முறையின் காரணமாக ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அடக்குமுறைகளைக் கையாள்கிறார்கள். சட்ட விதிகளை மீறுகிறார்கள். அதனால் பாதிக்கப்படும் மக்கள் தொகுதிகள் போராடத் துவங்குகின்றன. அரசு அடக்குமுறையின் வன்முறையும், எதிர்ப்பவர்களின் வன்முறையும் மோதும் சூழ்நிலை பல நாடுகளில் உருவாகின்றது.

அப்படி உள்நாட்டில் எதேச்சதிகார அரசு உருவாகும்போது, வன்முறை அதன் தேர்வாகும்போது, அது தன்னைக் காத்துக்கொள்ள வெளி நாட்டு எதிரிகளுடன் போரில் ஈடுபடுகிறது. சர்வதேச ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மீண்டும் உலகெங்கும் போர்க்களங்கள் உருவாகின்றன.

இந்தியாவில் பாஜக எதேச்சதிகாரமும், சர்வதேச உறவுகளும்

பாரதீய ஜனதா கட்சி உள்நாட்டு முரணரசியலில் வெறுப்பையும், வன்முறையையும் கையாளும் கட்சி. அதன் இந்து மத அடையாள அரசியல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டி, அதன் மூலம் எதேச்சதிகார அரசை உருவாக்கும் தன்மை கொண்டது. அதன் மறுபக்கம் அதன் பெருமுதலீட்டிய ஆதரவு என்பது, பொருளாதார அசமத்துவத்தை அதிகரித்து மக்களை, உழைப்பை சுரண்டக் கூடியது.

இதன் விளைவு சர்வதேச உறவிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு பிரதமரானார். அவர் 2019-ஆம் ஆண்டு ஒரு அபூர்வமான நிகழ்வில் பங்கேற்றார். அது என்னவென்றால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பாக ஹொடி மோடி (மோடி நலமா?) என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு என்பதைக் கடந்து மோடி ஒரு அசாதாரணமான செயலைச் செய்தார். “ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்” (உங்கள் அரசாங்கம், டிரம்ப் அரசாங்கம்) என்று அமெரிக்க முரணரசியல் களத்தில் டிரம்ப்பை ஆதரித்தார். ஒரு இந்தியப் பிரதமராக அவர் இன்னொரு நாட்டின் முரணரசியல் களத்தில் தலையிடக் கூடாது. ஆனால் அதனைச் செய்தார்.

அந்த தனிப்பட்ட உறவை உறுதி செய்யும் விதமாக டிரம்ப்பை இந்தியாவிற்கு அழைத்து குஜராத்தில் “நமஸ்தே டிரம்ப்” என்ற நிகழ்ச்சியை சில மாதங்கள் கழித்து 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருங்கிணைத்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பதைக் கடந்து தனக்கும் டிரம்ப்பிற்கும் இடையிலான தனிப்பட்ட உறவாக, நட்பாக அதனைக் காட்டிக் கொண்டார்.

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை 2025-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடுமையான எதேச்சதிகார நடைமுறைகளை அமெரிக்காவில் கடைபிடிக்கத் துவங்கினார். சர்வதேச உறவிலும் தன்னிச்சையாக வர்த்தக வரிகளை விதிக்கத் தொடங்கினார். அவரது செயல்களால் இந்திய வர்த்தகமும் பெரும் பாதிப்பை சந்தித்தபோது, மோடி அரசால் அதனை எதிர்கொள்ள இயலவில்லை.

இந்தியாவில் நிகழ்ந்த சில தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் சில நாட்கள் போர் நடந்தது. அது இருதரப்பு உடன்பாட்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் தான் இந்தியாவை எச்சரித்து போரை நிறுத்தியதாகச் சொல்லத் துவங்கினார். மீண்டும், மீண்டும் அதனை வலியுறுத்தினார். இந்தியப் பிரதமர் மோடி அதனை நேரடியாக மறுக்கவில்லை.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார். பின்னர் வாங்கிக் கொள்ள அனுமதித்திருப்பதாகக் கூறுகிறார். இந்தியாவின் இறையாண்மை என்பதை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறார். இதற்கெல்லாம் உச்சமாக தான் நினைத்தால் மோடியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்று வேறு கூறுகிறார்.

டிரம்ப் வெனிசுலாவின் அதிபரை கட த்திச் சென்று, அமெரிக்காவில் சிறையில் அடைத்துள்ளார். டென்மார்க்கின் கட்டப்பாட்டிலுள்ள கிரீன்லாண்ட்டை கைப்பற்ற முயல்கிறார். இஸ்ரேல் எதேச்சதிகாரி நெடன்யாஹுவுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்து அதன் தலைவர் அயதுல்லா கமேனியைக் கொன்றுள்ளார்.

டிரம்ப்பின் தான்தோன்றித்தனமான வரிவிதிப்பு முடிவுகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல போர் நடவடிக்கைகளுக்கும் அவர் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் அவையிடம் அனுமதி கேட்பதில்லை. ஒரு பழங்காலப் பேரரசரைப் போல பேசுகிறார், செயல்படுகிறார். அமெரிக்காவின் இருநூற்றைம்பது ஆண்டுகால குடியரசு விழுமியங்களைக் கொன்று புதைத்துவிட்டார்.

இந்தியப் பிரதமரால் இந்த அத்துமீறிய செயல்கள் எதற்கும் ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக இஸ்ரேல் ஈரானின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக அந்த நாட்டிற்குச் சென்று எதேச்சதிகாரி நடன்யாஹுவைப் புகழ்ந்துவிட்டு வந்துள்ளார். இந்தியா இஸ்ரேல் என்ற நாடு பாலஸ்தீனியர்களின் வாழ்விடத்தில் உருவாக்கப் பட்டதிலிருந்தே பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளது. அது முற்றிலும் அறம் சார்ந்த நிலைபாடு; ஆக்கிரமிப்பிற்கு எதிரான, எதேச்சதிகாரத்திற்கு எதிரான நிலைபாடு. ஆனால் இன்று அந்த கொள்கையிலிருந்து இந்தியா தடம் பிறழ்ந்துவிட்டது.

அதற்கு முக்கிய காரணம், பாஜக-வின் இந்து மத அடையாளவாத அரசியலுக்கும், இஸ்ரேலின் யூத மத அடையாளவாத அரசிற்கும் உள்ள ஆழ்ந்த ஒற்றுமைதான் என்றும் கூறலாம். இது இந்தியாவை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கூட்டாளியாக, அவற்றின் போர்க்குற்றங்களின் ஆதரவு நாடாக மாற்றுகிறது. ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டு தேர்தலின் முக்கியத்துவம்

இந்தியக் குடியசிற்குள்ளான முரணரசியலில் பாஜக-விற்கு திட்டவட்டமான எதிர்நிலையை எடுத்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் நிறுவனர் அண்ணா உலகக் கூட்டாட்சிக் குடியரசு என்ற தத்துவத்தை ஆதரித்தவர். உள்நாட்டு சமத்துவமே குடியரசின் ஆதார விசை என்பதை வலியுறுத்தியவர்.

அண்ணாவிற்குப் பின் ஐம்பதாண்டுகள் தி.மு.க-வை கட்டிக்காத்த கலைஞரும், அவருக்குப் பின்னால் எழுச்சிமிகு தலைமையை வழங்கி வரும் தளபதி ஸ்டாலினும் மதவாத அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்பது மட்டுமன்றி, தமிழ்நாட்டு மக்களையும் அதற்கு இடம் கொடாதவர்களாக உருவாக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டு முரணரசியலில் தி.மு.க-விற்கு எதிராக இயங்கி வந்த அ.இ.அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி அதனை ஊடுறுவி தமிழ்நாட்டில் கால்பதிக்க முயல்கிறது பாஜக. அதன் பத்தாண்டுகால முயற்சிகளின் முத்தாய்ப்பான தருணம் இந்த தேர்தல்.

தமிழ்நாடு, வங்காளம், கேரளம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் தேர்தல்கள் அடுத்த மாதம் நடக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலுமே பாஜக கால்பதிக்க முடியாமல் தடுப்பது என்பது இந்தியக் குடியரசை எதேச்சதிகாரப் பாதையிலிருந்து மீட்பதற்கு இன்றியமையாதது.

இந்தியாவை எதேச்சதிகாரப் பாதையிலிருந்து மீட்பது என்பது பழைய ஏகாதிபத்திய போர்களால் மானுடம் அழிவைச் சந்திக்காமல் மீட்பதற்கு அவசியமானது. மக்களாட்சிக் குடியரசு என்ற த த்துவத்தைக் காப்பாற்றாவிட்டால் உலகில் போர்கள் அதிகரிக்கும். இன்றுள்ள கணிணிகள், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஏவப்படும் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஏற்படத்தக் கூடிய அழிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவல்லவை.

கணிணித் தொழில்நுட்பத்தாலும், தகவல் தொடர்பு, போக்குவரத்து சாதன புரட்சிகளாலும் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு சுருங்கிவிட்டது. எந்த ஒரு நாட்டில் ஏற்படும் சேதமும், உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்கள் மனங்கள் விசாலமாகவில்லை. கணியன் பூங்குன்றன் பிறந்த தமிழ்நாடு உலக மக்களாட்சிக் கூட்டாட்சிக் குடியரசிற்கான பாதையைக் காட்ட வேண்டும். அதற்கான அச்சாரம் ஏப்ரல் 23-ஆம் தேதி இடப்பட வேண்டும். ஸ்டாலின் வென்று தொடரவேண்டும்.   

கட்டுரையாளர் குறிப்பு:  

Iran War and Indias Diplomatic Failures - Article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share