ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதற்கு தகுதியற்றவர் டிஐஜி வருண்குமார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.
டிஐஜி வருண்குமார் மற்றும் சீமான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியிருந்தனர்.
இந்தசூழலில் தனக்கு எதிராக பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக வேண்டும் என்று டிஐஜி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் , தனக்கு 2.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் டிஐஜி வருண்குமார் பற்றி பேச சீமானுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நீதிபதி தனபால் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று இல்லாமல், உத்தரவு பொதுவாக இருப்பதாகவும் இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என்றும் சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி, சீமான் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு வந்தபோது, சீமான் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறை சென்றவர் வருண்குமார் என்று அவர் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்தபோது, ட்விட்டரில் தனது சொந்தக் கருத்துகளைப் பதிவிட்டதற்காகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர். இது அவரது நடத்தைக்கு சாட்சி.
அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரியாக அவருடைய செயல்பாடுகள் குறித்து மட்டுமே விமர்சிக்கப்பட்டது.
விமர்சனத்தைக்கூட தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ். அதிகாரியானார் என்று தெரியவில்லை. நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவர் ஆவார்.
அவர் மனநல ஆலோசனை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வருண்குமார் மீது கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
