ஐஎன்எக்ஸ் மீடியா (INX Media) பண மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது வழக்குத் தொடருவதற்கான பொருளாதார விவகாரங்களுக்கு மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை- Prosecution Sanction டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் (ED) இன்று பிப்ரவரி 26-ந் தேதி தாக்கல் செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, INX Media நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB) ஒப்புதல் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்புதல் வழங்கியதன் மூலம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பணம் பெறப்பட்டதாகவும், அந்த பணம் போலி நிறுவனங்கள் Shell Companies வழியாக கைமாறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட பணம் பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களாக மாற்றப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
அண்மையில் உச்ச நீதிமன்றம் பிபு பிரசாத் ஆச்சார்யா வழக்கில் வழங்கிய தீர்ப்பில், பொது ஊழியர்கள் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அரசின் அனுமதி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பின்பற்றி, தற்போது மத்திய அரசின் முறைப்படியான அனுமதியைப் பெற்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்,
”பிப்ரவரி 10-ந் தேதியன்று மத்திய அரசால் இந்த அனுமதி வழங்கப்பட்டது” என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் என்ன?
- ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மூன்று மொரீஷியஸ் முதலீட்டாளர்களிடமிருந்து ₹4.62 கோடி அந்நிய நேரடி முதலீட்டைப் பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (FIPB) அனுமதி கோரியது. ஆனால், அந்நிறுவனம் அனுமதிக்கப்பட்ட தொகையான ₹4.62 கோடியை விட பல மடங்கு அதிகமாக, அதாவது ₹305 கோடி பெற்றது
- எஃப்ஐபிபி ஒப்புதலைப் பெறுவதற்காக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு.
- ப.சிதம்பரம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறையற்ற எஃப்ஐபிபி ஒப்புதலை வழங்கியதாகவும், இதன் மூலம் அவரது குடும்பத்தினர் ஆதாயம் அடைந்தனர் என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
வழக்கில் இதுவரை..
2008: ஐஎன்எக்ஸ் மேக்ஸ் விவகாரத்தில் ₹305 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் களமிறங்கியது.
2010: அமலாக்கத்துறை (ED) FEMA சட்ட மீறல் குற்றச்சாட்டில் வழக்கை பதிவு செய்தது.
2017 : சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. கார்த்தி சிதம்பரம் மீது பணமோசடி வழக்கு பதியப்பட்டது.
2019 : முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
2019: 105 நாட்கள் சிறையில் இருந்த பிறகு ப. சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது.
2020: சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் மனுவைத் தாக்கல் செய்தது.
2021: அமலாக்கத்துறையின் புகாரை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
2024: அமலாக்கத்துறை மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
2026: வழக்கை விரைவுபடுத்துவதற்காக ப.சிதம்பரம் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறை மத்திய அரசின் அனுமதியை (பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு) டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
