ADVERTISEMENT

சுற்றுலா துறையில் ரூ.22,794 கோடி முதலீடு : 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு!

Published On:

| By Kavi

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இன்று (பிப்ரவரி 2) தொடங்கியது.  முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ தமிழின் அருமை குறித்தும் எங்களின் நாகரிகத்தின் தொன்மை குறித்தும் உலக அளவிலிருந்து வந்திருக்கக்கூடிய தொழில்முனைவோர்கள் எல்லோருக்கும் தெரியும்!

ADVERTISEMENT

தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை தொடங்கி, மாமல்லபுரம் – வேடந்தாங்கல் – ஊட்டி – கொடைக்கானல் – தஞ்சை பெரிய கோயில் – கங்கைகொண்ட சோழபுரம் – செஞ்சிக் கோட்டை என்று குமரி வள்ளுவமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை வரைக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கிறது!

இயற்கை எழில் – வியக்க வைக்கும் கட்டடக் கலை – தலைநிமிர வைக்கும் கோபுரங்கள் – வரலாற்று பெருமிதத்தை எடுத்துச் சொல்லக்கூடிய இடங்கள் என்று, தமிழ்நாட்டில் Explore பண்ணவும், Experience பண்ணவும் நிறைய இடங்கள் இருக்கிறது.

ADVERTISEMENT

பொதுவாக, நாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, பெரும்பாலான நாடுகளில், தங்களின் பாரம்பரிய கலைகள் என்று சில கலைநிகழ்ச்சிகளை நடத்தி காட்டுவார்கள். அதுவே, தமிழ்நாட்டை எடுத்துகொண்டால், கரகாட்டம் – காவடியாட்டம் – ஒயிலாட்டம் – மயிலாட்டம் – தெருக்கூத்து – தப்பாட்டம் – பரதநாட்டியம் என்று ஏராளமான கலைகள் இருக்கிறது.

அதேபோல், நம்முடைய பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் உள்ளிட்ட விளையாட்டுகளும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது! இந்தக் கலைகளையும் – கலைஞர்களையும் – நம்முடைய பண்பாட்டையும் உலகளவிற்குக் கொண்டு சேர்க்கும் வலிமை, சுற்றுலா துறைக்குதான் இருக்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும் என்று, நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான முன்னெடுப்புகளை நாம் எடுத்திருக்கிறோம்! செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். 

தொடர்ந்து கீழடி அருங்காட்சியகம் முதல் குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது வரை சுற்றுலா துறைக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்,  “ கடந்த ஐந்து ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, 612 கோடியே 18 இலட்சம் ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம். இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? கடந்த ஐந்தாண்டுகளில், 128 கோடியே 97 இலட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.  ஆனால், இது போதாது. 

தமிழ்நாட்டை நோக்கி சுற்றுலாப் பயணிகள் இன்னும் அதிகமாக வர வேண்டும்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகத்தில் இருக்கும் அத்தனை மக்களையும் உறவினர்களாக நினைத்து அன்போடும், நட்போடும் பழகுபவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்! அதனால், வெளி மாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வர வேண்டும்!

சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்ப்பது -இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவது – தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள், மேம்படுத்துபவர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின்கீழ் அரசுடன் ஒன்றிணைப்பது மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிப்பது, ஆகிய இந்த மாநாட்டின் நோக்கங்கள் நிறைவேறக்கூடிய வகையில் எல்லோரும் துணை நிற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு சுற்றுலா பிரிவுகளில், 22 ஆயிரத்து 794 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கான உறுதியளிக்கப்பட்ட முதலீடு, 65 ஆயிரத்து 937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share