வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நவாஸ் கனிக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியும், நவாஸ் கனி, 2019, 2024 ஆகிய தேர்தல்களையொட்டி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டு பார்த்தபோது அவர் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வருகிறது என்று திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நவாஸ் கனி வருமானத்தை மறைத்தது தொடர்பாக வருமானவரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன், நவாஸ் கனி வருமானத்தை மறைத்தது தொடர்பான புகாரில் தங்கள் வசம் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரும் நேரில் வந்து சில ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார் என்று வாதங்களை முன் வத்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நவாஸ் கனி சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 25ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்
