தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகம் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்ட அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.
மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, 2026-2027-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.
2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய கடன்கள் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி பற்றிஅறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
