TAPS திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், TAPS என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 17) பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
