ADVERTISEMENT

கோபாலபுரம் ஹீரோ… பேப்பர் தாத்தாவின் சுவாரஸ்ய கதை!

Published On:

| By Kavi

கோபாலபுரத்தைச் சேர்ந்த 94 வயது தாத்தா தினம்தோறும் சைக்கிளில் வீடு வீடாக சென்று பேப்பர் போடுவதையும் பால் பாக்கெட்டுகள் போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வயதில் நேரம் தவறாமல், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் அவர் செய்யும் பணி அந்த பகுதி மக்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. interesting story of Gopalapuram Hero Paper thatha

கோபாலபுரத்தில் வசிக்கும் மக்களால் பேப்பர் தாத்தா என்று அன்போடு அழைப்படுபவர் சண்முகசுந்தரம். ராயப்பேட்டையச் சேர்ந்தவர். தினதோறும் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். முதலில் அந்த பகுதியில் ஒரு மொத்த விற்பனை கடையில் இருந்து 50 பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அதை வீடு வீடாக சென்று விநியோகித்துவிடுவார்.

ADVERTISEMENT

அடுத்தது மூச்சு விடுவதற்கு கூட இடைவெளி கொடுக்காமல், உடனடியாக நியூஸ் பேப்பர்களை வாங்கி தனது சைக்கிளின் முன் கூடையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று போட்டுவிடுவார்.

பத்மாவதி சாலையில் தொடங்கி கோபாலபுரத்தில் உள்ள 8 தெருக்களில் சுமார் 60 வீடுகளில் செய்தித்தாள்களை விநியோகிக்கிறார். மழை, வெயில் என எது வந்தாலும் தவறாமல் இந்த பணியை செய்துவிடுவார் பேப்பர் தாத்தா என்கிறார்கள் கோபாலபுரம் மக்கள்.

ADVERTISEMENT

இந்த வழக்கத்தை கடந்த 25 ஆண்டுகளாக தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளார் பேப்பர் தாத்தா.

கோபாலபுரத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மோகன், பேப்பர் தாத்தா குறித்து கூறுகையில், “அவர் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி. தினமும் அவரை பார்க்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அவர் சைக்கிளை ஓட்டி வருவதை பார்த்தால் எனது சோம்பேறித்தனமெல்லாம் காணாமல் போய்விடும்.

ADVERTISEMENT

முன்னதாக அவர் வீடு வீடாக தண்ணீர் கேன்களை போடுவார். அதனால் பேப்பர் தாத்தா இந்த பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்” என்கிறார்.

பேப்பர் தாத்தா கூறுகையில், “நான் ஒருநாளும் இந்த வேலையை தவறியதில்லை. இந்தப் பகுதியில் செய்தித்தாள்களை விநியோகிப்பதால்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் உட்பட குறிப்பிடத்தக்க முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

தினமும் பேப்பரை போட்டுவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தை பார்த்துக்கொள்ளும் வேலைக்கும் செல்கிறார் பேப்பர் தாத்தா. அவருக்கு 10 பேர பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்கு போக வேண்டாம் என்று பேர பிள்ளைகள் வலியுறுத்தியும், பேப்பர் தாத்தா அதை கேட்பதில்லை.

கோவிட் சமயத்தில் செய்தித்தாள்கள் வாங்குவது குறைந்ததாக கூறும் பேப்பர் தாத்தா, “முன்னதாக 100 வீடுகளில் பேப்பர் வாங்கினார்கள். இப்போது 60 ஆக குறைந்துள்ளது. எனது பேரக்குழந்தைகள் என்னை வற்புறுத்திய போதும், என்னால் ஓய்வெடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். எனக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறார்கள்.

ஆனால் எனது மகிழ்ச்சிக்கு ரகசியமே, நான் மக்களை சுற்றி சுற்றி வருவதுதான். அதனால் நான் ஒருநாள் கூட வீட்டில் இருந்ததில்லை. என்னையும் எனது சைக்கிளையும் பிரிக்க முடியாது” என்று கூறுகிறார்.

94 வயதிலும் தனது மனைவியையும் பேப்பர் தாத்தாதான் பார்த்துக்கொள்கிறார். பல்வேறு வேலைகளை செய்து ஐந்து மகள்களையும் ஒரு மகனையும் படிக்க வைத்துள்ளார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் பேப்பர் தாத்தா.

1930ல் பிறந்த இவர், ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். சமீபத்தில் அந்த பள்ளியால் பேப்பர் தாத்தா கவுரவிக்கப்பட்டுள்ளார்.

செய்தித்தாள்களை விநியோகிப்பது மட்டுமல்ல கோபாலபுரம் மக்களின் மனதில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விதைத்திருக்கிறார் பேப்பர் தாத்தா. interesting story of Gopalapuram Hero Paper thath

நன்றி : தி இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share