இந்திய வானில் இண்டிகோ, டாடா நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு புதிய விமான நிறுவனம் சிறகடிக்கத் தயாராகி வருகிறது. அதுதான் ‘சங்கு ஏர்‘ (Shankh Air). ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்குவது என்பது சாதாரண விஷயமல்ல, பல்லாயிரம் கோடி முதலீடு தேவைப்படும் ஒரு பிரம்மாண்ட கனவு. இந்தக் கனவைச் சுமந்து வரும் அந்த மனிதர் யார்?
சாமானியனின் சாம்ராஜ்ய கனவு: ஷ்ரவன் குமார் விஸ்வகர்மா
‘சங்கு ஏர்’ நிறுவனத்தின் பின்னணியில் இருக்கும் முக்கியத் தூண், அதன் நிறுவனர் ஷ்ரவன் குமார் விஸ்வகர்மா (Sharvan Kumar Vishwakarma). உத்தரப் பிரதேசத்தின் பதோஹி (Bhadohi) என்ற சிறிய மாவட்டத்தைச் சேர்ந்தவர். கார்பெட் உற்பத்திக்குப் பெயர்போன இந்த ஊரிலிருந்து வந்த ஷ்ரவன் குமாரின் ஆரம்பம் மிகவும் எளிமையானது.
தொடக்கத்தில் கட்டுமானத் துறையில் (Construction Business) சிறிய அளவில் தனது பயணத்தைத் தொடங்கினார். சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு, “மக்களைத் தரையில் இணைத்தால் மட்டும் போதாது, வானிலும் இணைக்க வேண்டும்” என்ற பெரிய ஆசை துளிர்விட்டது. ஒரு சிறிய ஊரிலிருந்து வந்து, மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே கோலோச்சும் விமானப் போக்குவரத்துத் துறையில் நுழைய முடிவெடுத்தது அவரது அசாத்திய துணிச்சலைக் காட்டுகிறது. அவரது இந்தக் கனவுதான் இன்று ‘சங்கு ஏர்’ ஆக வடிவம் பெற்றுள்ளது.
உ.பி-யின் முதல் அடையாளம்:
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படவிருக்கும் முதல் விமான நிறுவனம் இதுதான். லக்னோ (Lucknow) மற்றும் நோய்டாவில் உள்ள ஜேவார் (Jewar) விமான நிலையங்களை இது தனது முக்கிய மையமாக (Hub) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்றது இவர்களின் முதல் வெற்றி.
போட்டியும்… சாமானியனின் நம்பிக்கையும்:
சந்தையில் இண்டிகோ போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போது, ‘சங்கு ஏர்’ எப்படிச் சமாளிக்கும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஆனால், ஷ்ரவன் குமார் விஸ்வகர்மா தனது சேவையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, வாரணாசி, கோரக்பூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களையும் இணைப்பதன் மூலம், சாமானிய மக்களுக்கும் விமானப் பயணத்தைக் கொண்டு சேர்ப்பதே இவர்களின் நோக்கம்.
ஒரு காலத்தில் சிறிய ஒப்பந்ததாரராக இருந்த ஒருவர், இன்று சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது பல இளம் தொழில்முனைவோருக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம். ‘சங்கு ஏர்’ வானில் பறக்கத் தொடங்கும்போது, அது ஒரு புதிய விமானத்தின் சத்தமாக மட்டுமல்லாமல், சாதிக்கத் துடிக்கும் ஒரு சாமானியனின் வெற்றிக் குரலாகவும் ஒலிக்கும்!
