அதிகரித்த குற்றச்சாட்டுகள்… தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம்!

Published On:

| By vanangamudi

inspector balachandran tranfer to north zone

மத்திய மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளரான பாலச்சந்திரனை வடக்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுந்தரேசன் கடந்த 17ஆம் தேதி தனது அலுவலக வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி சாலையில் நடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறிப்பாக தனது வாகனம் பறிக்கப்பட்டதாக கூறியபோது, ”எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லுங்கள்” என டிஎஸ்பியான தன்னிடம் அவமரியாதையுடன் நடந்துகொண்டதாக காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் மீது அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

எனினும் அரசு ஊழியருக்கான விதிகளை மீறி, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஊடகங்களை சந்தித்ததாகவும், உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கூறி டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுந்தரேசனின் குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் டி. பாலச்சந்திரன் குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது, அவர் மீது அதிகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாக அடிப்படையில் உடனடியாக வடக்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர் பணியமர்த்தப்படும் இடம், தேதி உள்ளிட்ட தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share