நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜனவரி 10) ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ ஏ.எஸ்.பி. முகேஷ் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் சிபிஐ விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது, செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விஜயின் பிரச்சார வாகனம் பனையூரில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நேரில் ஆஜராகியுள்ளார்.
சிபிஐ அதிகாரிகள் ஓட்டுநரிடம் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நேரம், எந்த இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது, எப்போது பிரச்சாரத்தைத் தொடங்கினார், எப்போது முடித்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
