”ஊழியர்களுக்கு ஓவர் டைம் வேலை கொடுக்காதீங்க… இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அந்தர் பல்டி!

Published On:

| By christopher

infosys narayana moorthy uturn on his 70 hours work

உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு யாரும் ஓவர்டைம் வேலை செய்ய வேண்டாம் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி வருவது கவனம் பெற்றுள்ளது. infosys narayana moorthy uturn on his 70 hours work

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் உள்ளது. 1981ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு உச்சி மாநாட்டில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் N.R. நாராயண மூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

70 மணி நேரம் உழைக்க வேண்டும்!

அப்போது அவர், “தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி குறியீடு பின்தங்கி உள்ளது. நான் வேலை-வாழ்க்கை சமநிலை என்ற இந்த கருத்தை நான் நம்பவில்லை. எனவே இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் காலை 6.20 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணியாற்றுவேன். அதுபோல உழைத்தால்தான் இந்தியா முன்னேறும்” என நாராயணமூர்த்தி கூறினார்.

முன்னதாக 1986ஆம் ஆண்டு இந்தியா ஐந்து நாள் வேலை வாரத்திற்கு மாற்றப்பட்டபோது, அதற்கு மூர்த்தி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் பேசியதற்கு முற்றிலும் முரண்பாடாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நடவடிக்கை ஊழியர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ரிலாக்ஸ் செய்ய நேரம் ஒதுக்குங்கள்!

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, நிறுவனத்தின் HR குழு வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாளைக்கு சராசரியாக 9.15 மணிநேர வேலை நேரத்தைத் தாண்டி ஓவர் டைம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சுகாதார நினைவூட்டல் மின்னஞ்சல்களை அனுப்புகிறதாம்.

அதில், “உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் ஆரோக்கியமான வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பது உங்கள் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஓய்வு நேரங்களில் உங்களை ரிலாக்ஸ் செய்ய நேரம் ஒதுக்குங்கள், முடிந்தவரை வேலை தொடர்பான தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்” என்று அதில் அறிவுறுத்தப்படுகிறது.

இணை நிறுவனரான நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேர வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை என்பதில் தனக்கு உடன்பாடிலை என கூறியிருந்தாலும், தற்போது இன்ஃபோசிஸ் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் பல ஐடி நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

அதிக பணிச்சுமை, மோசமான தூக்கம் மற்றும் ஒழுங்கற்ற உணவு காரணமாக இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை அதிகரித்து வரும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 323,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட இன்போசிஸ், இப்போது அத்தகைய அபாயங்களை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share