அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்க ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு உலக நாடுகளுக்கு எதிராக அறிமுகப்படுத்திய கடுமையான பரஸ்பர வரி கொள்கையால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்ற காரணத்தால், ஆகஸ்ட் 27-ஆம் தேதி மேலும் 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டு, மொத்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதனால் ஜவுளி, மருந்து, ஆட்டோ பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உடனடியாக குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கான கூடுதல் 25 சதவீத அபராத வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.இதனால்
மொத்த வரி இப்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொழில் துறையினரிடையே பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அமெரிக்க இறக்குமதி சுங்க வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை அமெரிக்க சந்தையில் மீண்டும் சமநிலையான போட்டி நிலைக்கு வந்துள்ளது. முக்கிய FTA ஒப்பந்தங்கள் நிறைவு பெறும் நிலையில் இருப்பதும், இந்தியாவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் ஆர்வம் அதிகரிப்பதும், ஏற்றுமதி முன்னேற்றம் தொடர்ந்து மேம்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
FY 2026–27 முதல், ஆடை மற்றும் வீட்டு ஜவுளி ஏற்றுமதிகளில் மாதந்தோறும் இரட்டை இலக்க வளர்ச்சி காணப்படும். இதன் மூலம், தற்போதைய USD 1.27 பில்லியன் மாதாந்திர ஏற்றுமதி அளவு, USD 1.5 பில்லியன் என்ற நிலையான அளவிற்கு உடனடியாக உயர வாய்ப்பு உள்ளது.
இந்த சமீபத்திய சவால்கள், வெளியில் இருந்து வரும் பிரச்சினைகளையும் மந்த காலங்களையும் சமாளிக்கத் தேவையான திறன்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை முடிக்க உதவிய இந்திய அரசுக்கும், கடினமான காலத்திலும் ஆதரவு வழங்கிய அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றிகள். அதேபோல், தள்ளுபடி விலைகளில் ஏற்றுமதி செய்து, survival exports அணுகுமுறையை பின்பற்றி, தங்கள் நிறுவனங்களையும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்கையும் பாதுகாத்த இந்திய ஏற்றுமதியாளர்களின் தாங்கும் மனப்பாங்கையும் பாராட்டுகிறோம்.
எதிர்காலத்தில், போட்டித்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்க ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
