இண்டிகோ விமான சேவை பாதிப்பை தொடந்து விமான பணியாளர்களின் நேர வரம்பு விதிமுறைகளை டிஜிசிஏ திரும்ப பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ எதிர்கொண்டுள்ள விமானிகள் பற்றாக்குறை மற்றும் புதிய பணி நேர விதிகள் தொடர்பான சவால்களால், இன்று 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக லட்சக்கணக்கான விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், இங்கிருந்து செல்லும் விமானப் பயணிகளும் இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நெருக்கடியைச் சமாளிக்க விமான போக்குவரத்து ஆணையகரமான டிஜிசிஏ முக்கிய தளர்வுகளை அறிவித்தது.
புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளது. அதாவது விமானிகள் 48 மணி நேரம் ஓய்வெடுக்கலாம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விமான சேவைகள் இடையூறு குறித்து, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறுகையில், “முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது நாட்கள் ஆகும். டிசம்பர் 10-15 க்கு இடையில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.
டிசம்பர் 5 மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாளாகும். அன்று சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
