சென்னை விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் இருந்து நேற்று இரவு (செப்டம்பர் 16) 165 பயணிகளுடன் இண்டிகோ விமானம் பெங்களூருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வானில் வட்டமடித்து திரும்பிய விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பயணித்த 165 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பின்னர் மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த அவசர தரையிறக்கத்தால் சில விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் வரை பலியாகினர். தற்போது சென்னையில் விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.