நடுநிலைமை என்ற கண் துடைப்பு!

Published On:

| By Minnambalam Desk

Modi

பத்ரி ரெய்னா

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் விஷயத்தில் இந்தியா வாய்மூடி மௌனமாக இருப்பது அதன் போலிவேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்தியா இப்போது வெட்கமின்றி சியோனிச முகாமில் இணைந்துவிட்டது. நெதன்யாகுவின் தேசத்திற்கு மோடி சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் நிகழ்ந்த சமயத்தைக் கவனிக்கும்போது கடுமையான óசந்தேகங்கள் எழுகின்றன. ஈரான் நாட்டின் தலைவர் (இதற்கு இந்தியப் பிரதமரிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவதற்குச் சரியாக 48 மணி நேரத்திற்கு முன்பு, திரு. மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (Knesset) உரையாற்றும்போது, இஸ்ரேலை ஒரு “கூட்டாளி” என்று குறிப்பிட்டு அந்நாட்டிற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்த அவர், காசாவில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ‘போர்டு ஆஃப் பீஸ்’ (Board of Peace) என்ற கூலிப்படை முயற்சியைப் பாராட்டியதன் மூலம், இந்தியாவின் மேற்கு ஆசியக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

மோடியின் வருகைக்கும், அவர் அங்கிருந்து கிளம்பிய சில மணி நேரங்களிலேயே நடந்த தாக்குதலுக்கும் இடையிலான காலப் பொருத்தம் குறித்து இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் ஏன் அவ்வாறு விளக்கமளிக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ADVERTISEMENT

இறந்துபோன எப்ஸ்டீனின் (Epstein) கோப்புகள், வழக்கத்திற்கு மாறான சில பிணைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படும் ஊகங்களையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஈரானை ஆக்கிரமிக்கும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு டிரம்ப் உடன்படுவது போன்றவை. சிறைக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் நெதன்யாகு வரும் தேர்தல்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதையும் அவர் கருத்தில் கொண்டிருக்கலாம்.

வலதுசாரி மாற்றம்

இஸ்ரேல்/பாலஸ்தீன விவகாரத்தில் பழைய வலதுசாரி நிலைப்பாடு வாஜ்பாயுடன் முடிந்துவிட்டது. அவர் பாலஸ்தீனத்தின் பக்கம் உறுதியாக நின்றார். புதிய நிலைப்பாடோ கலாச்சார/வரலாற்றுப் பிரச்சினைகளில் சாவர்க்கரின் கோட்பாடுகளை முழுமையாகப் பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

சாவர்க்கர் தனது ‘இந்திய வரலாற்றின் ஆறு பெரும் காலகட்டங்கள்’ (Six Great Epochs of Indian History) என்ற நூலில், “வன்முறைச் செயல்கள் மூலமே நாம் இந்துக்களாகிறோம்” என்று எழுதினார். ‘பழங்குடியினரை’ (ஆதிவாசிகள்) காலனித்துவப்படுத்தியதே நாம் இந்துக்களாக மாறிய முதல் பெரிய நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார்.

“ராணுவத்தை இந்துமயமாக்கு, இந்துத்துவத்தை ராணுவமயமாக்கு” என்ற அவரது ராணுவவாத தேசியம், காந்தியின் அமைதிவாதத்திற்கும் பன்மைத்துவத்திற்கும் மாற்றாக உருவாக்கப்பட்டது. காந்தியின் அணுகுமுறை ‘பெண்மையின் பலவீனம்’ என்றும், அதன் காரணமாகவே இந்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கித் தவித்தனர் என்றும் சாவர்க்கர் கேலி செய்தார்.

மேற்கு ஆசிய யதார்த்தங்கள் குறித்த இந்திய அரசின் புதிய நிலைப்பாடு, சோனியா காந்தி குறிப்பிட்டது போல வெறும் இணக்கம் மட்டுமல்ல, அது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும் ஆகும்.

இஸ்லாத்தின் மீதான பொதுவான வெறுப்புடன், சியோனிஸ்டுகளும் சாவர்க்கர்வாதிகளும் ஒரு பொதுவான கலாச்சார சித்தாந்தத்தில் இணைந்து நிற்கிறார்கள். இதற்குப் பின்னால் ராணுவ, தொழில்நுட்ப, நிதி நலன்கள் உள்ளன. இவை சமத்துவ, ஜனநாயகக் கருத்துக்களை ஒடுக்க நினைக்கின்றன.

அதிகாரத்திடம் உண்மையை நேருக்கு நேர் பேசும் அறநெறி கொண்ட ஒரு குடியரசு என்ற இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம் இப்போது மறைந்துவிட்டது. 1930களில் அப்பாவி யூதர்கள் கொல்லப்பட்டபோது எழுந்த அதே கண்டனம், இப்போது காசாவில் நடக்கும் படுகொலைகளுக்கும் எழுந்திருக்க வேண்டாமா?

ஜெனசிஸ் 15 (Genesis 15) சியோனிஸ்டுகளுக்கு யூப்ரடீஸ் முதல் மத்திய தரைக்கடல் வரையிலான நிலங்களுக்கு உரிமை வழங்குகிறது என்றால், சனாதன இதிகாசங்கள் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு ‘அகண்ட பாரத’க் கனவை அங்கீகரிக்கின்றன.

அடாவடித்தனத்திற்குத் தடைகள்

இருந்தபோதிலும், இந்த புதிய அடாவடித்தனத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈரான் போன்ற இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது டிரம்ப் படையெடுப்பதை அமெரிக்க மக்களில் கால் பகுதியினர்கூட ஆதரிக்கவில்லை. அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்களில் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

அனுராக் தாக்கூர், நிஷிகாந்த் துபே போன்றவர்களிடம் கேட்டால், கேள்வி கேட்கும் அமெரிக்க மக்களையும் சட்டமியற்றுபவர்களையும் ‘தேசத்துரோகிகள்’ என்று முத்திரை குத்துவார்கள்.

ராகுல் காந்தியின் ‘தீய’ செல்வாக்கு

ராகுல் காந்தியின் செல்வாக்கு அமெரிக்காவரை பரவியுள்ளது போலத் தெரிகிறது. அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் அல்ல என்ற கருத்தை அமெரிக்க மக்கள் கொண்டுள்ளனர். இந்தியாவில் ‘விக்சித் பாரத்’ பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள ஊடக முதலாளிகள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அமெரிக்காவில் இன்றும் பல ஊடகங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. டிரம்ப் அவர்களை எவ்வளவுதான் இகழ்ந்தாலும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஓடிவிடுவதில்லை.

இறுதிக் குறிப்பு

ஈரானியர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்: உங்கள் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் எடுக்கும் உறுதியான முடிவு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலங்கரை விளக்கமாகும். எமது கவிஞர் தாகூர் சொன்னது போல, “யாரும் உன்னுடன் வரவில்லையென்றால், உண்மையின் பாதையில் தனியாக நட” .

அடிபணிவதை விட உன்னதமான தியாகமே சிறந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது தங்கள் செயல்களுக்குக் காரணம் சொல்ல முடியாமல் திணறிவருகின்றனர். அவர்கள் மீண்டும் வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஓடியதுபோல இங்கிருந்தும் ஓடும் காலம் வரும்.

பாரதத்தைப் பொறுத்தவரை, குற்றவாளிகளுடனான இந்தத் தேனிலவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைக் காலம்தான் சொல்லும்.

கட்டுரையாளர்: பத்ரி ரெய்னா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share