முரண்படும் மாநிலங்கள்
ருக்மிணி எஸ்.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை.
‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம்.
முதலாம் பகுதியில், தற்போதைய தருணத்தை விவரிக்கவும், ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல்போன அண்மைக்காலத்து முக்கியத் தரவுகளையும் தொகுத்து அளித்தோம். இரண்டாம் பகுதியில், பிறப்பு விகிதங்கள் குறைவது தொடர்பான தரவுகளை ஆராய்ந்தோம். இந்தியா உலகளாவிய போக்குக்குள் இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காவும் உள்ளது என்று சுட்டிக்காட்டும் ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். மூன்றாம் பகுதியில், இந்திய மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள்தொகைப் புள்ளிவிவர வேறுபாடுகளையும் அவை தற்போதுள்ள சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதையும் பார்ப்போம்.
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் பல வழிகளில் நாட்டிற்கான பொதுவான சவால்களாக உள்ளன. உழைக்கும் மக்களால் கிடைக்கும் பலன் உச்சத்தைத் தொடுதல், தொற்றுநோயியல் மாற்றத்தில் ஏற்படும் முன்னேற்றம், பிறப்பு விகிதங்களின் சீரான சரிவு, முதியோர் எண்ணிக்கை அதிகமாவது குறித்த கவலை ஆகியவையே அந்தச் சவால்கள். உயர்தரத் தரவுகளின் துல்லியமான வாசிப்பின் அடிப்படையில், கொள்கையும் அரசியலும் ஒன்றிணைந்து இந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், பல முக்கியப் பிரச்சினைகளில் நாட்டின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் ஆழமான பிளவுகளைக் கொண்டுள்ளன. இது, மக்கள்தொகை விஷயத்தில் பிளவுபட்ட அரசியல் எதிர்வினைகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பகுதியில், இந்தப் பிளவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் ஆராய்வோம்.
1. மாற்றத்தின் காரணிகள்
பிறப்புகள், இறப்புகள், இடப்பெயர்வு ஆகிய மூன்று பரந்த அளவிலான செயல்முறைகள் மக்கள்தொகை மாற்றங்களைத் தூண்டுகின்றன. இந்திய மாநிலங்களின் மக்கள்தொகையில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்த மூன்று காரணிகளை முதலில் பார்ப்போம்.
கடந்த ஆண்டுகளுக்கான உலகளாவிய தரவுகளுக்கும், 2100ஆம் ஆண்டு வரையிலான கணிப்புகளுக்கும், நாங்கள் 2024ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உலக மக்கள்தொகைக் கண்ணோட்டங்களின் திருத்தப்பட்ட ஆவணத்தைப் (United Nations World Population Prospects, 2024 Revision) பயன்படுத்துகிறோம். இந்திய மாநிலங்களின் 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளுக்கு, இந்தியாவின் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். 2023ஆம் ஆண்டிற்குப் பிந்தைய தரவுகளுக்கும், 2036ஆம் ஆண்டுவரையிலான இந்திய மாநிலங்களுக்கான கணிப்புகளுக்கும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (Registrar General of India) செய்த மக்கள்தொகைக் கணிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்தியா 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
i) கருவுறுதலில் வேறுபாடு
கருவுறுதல் (Fertility) – ஒரு பகுதியில் ஒரு பெண் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை – தொடர்ந்து சரிவைக் கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் பார்த்ததுபோல, இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே இந்த விஷயத்தில் வேறுபட்ட விகிதங்கள் நிலவுகின்றன.
வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வசதி படைத்தவை. இவை பெண்கள் கல்வி, பெண்கள் ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக, இந்த மாநிலங்களில், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, ஏழ்மையான கிழக்கு, வடக்கு மாநிலங்களைவிட, கருவுறுதல் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும், “பதிலீட்டுக் கருவுறுதல் விகிதத்தை” (Replacement Fertility) இந்த மாநிலங்கள் மிக விரைவாக அடைந்தன.
மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாகப் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை. நாடுகளின் வளமை அதிகரிக்கும்போதும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை பெண்களுக்குச் சிறந்த முறையில் கிடைக்கும்போதும் கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் நடைமுறை.
ஒரு நாட்டின் TFR 2.1ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றிருந்தால், அந்த நாடு “பதிலீட்டுக் கருவுறுதல்” நிலையை அடைந்துவிட்டதாக மக்கள்தொகையியலாளர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இரண்டு பெரியவர்களுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைகளில் சில குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான நிகழ்தகவுகளைக் கணக்கிட்டால், அந்தத் தம்பதியினர் தங்கள் வழ்நாளில் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்ற முறையில் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த நிலைக்குக் கீழே குறைந்தால், மக்கள்தொகை அதன் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும்.
இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கருவுறுதல் குறைந்திருந்தாலும், அவற்றின் போக்குகள் பல பதிற்றாண்டுகளாக வேறுபடுகின்றன. பதிலீட்டுக் கருவுறும் விகிதத்தை இன்னும் அடையாத நான்கு மாநிலங்களும் இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளான இந்தியாவின் மையத்திலும் வடக்கிலும் உள்ளன. உத்தரப் பிரதேசம் 2025இலும் மத்தியப் பிரதேசம் 2028இலும் இந்த மைல்கல்லை அடைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதிலீட்டுக் கருவுறுதலை அடைய 2039வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மாநிலம் பிகார் மட்டுமே. (தரவு கிடைத்த மிகச் சமீபத்திய ஆண்டான 2023இற்குள் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான கணிப்புகள் 2022இல் அம்மாநிலம் இந்த மைல்கல்லை எட்டும் என்று மதிப்பிட்டிருந்தாலும், அது இன்னும் எட்டவில்லை).

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக பிறப்பு விகிதங்கள் அதிக ஆண்டுகளுக்கு நீடிப்பதுதான் இந்தக் கருவுறுதல் வேறுபாட்டின் உடனடித் தாக்கம். இந்தியாவில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒருவர் (14 வயதுக்குட்பட்டவர்கள்) பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாழ்கிறார்கள். பிகாரின் குழந்தைகளின் முழுமையான எண்ணிக்கை 2036வரை (நமக்குக் கிடைத்ததிலேயே மிகத் தொலைதூரக் கணிப்பு ஆண்டு) குறைய வாய்ப்பில்லை. அதேசமயம், அனைத்துத் தெற்கு மாநிலங்களிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. கருவுறுதலில் உள்ள இந்த வேறுபாடும் இந்த மாநிலங்களில் இது ஏற்படுத்தும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் தாக்கமும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே வளர்ந்துவரும் மோதலுக்குக் காரணமாக இருக்கிறது.
ii) இறப்பு விகிதங்களில் மாற்றங்கள்
இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களைவிடச் சுகாதாரக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வயதின் அமைப்பு காரணமாக அதிக இறப்பு விகிதங்களும் காணப்படுகின்றன.
தொற்றும் நோய்கள், பிரசவத்தின்போதும் குழந்தைப் பருவத்திலும் உள்ள சூழ்நிலைகள் ஆகியவை இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் மரணங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக உள்ளன. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது 5ஆகக் குறைந்துள்ளது (அதாவது, ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் 5 குழந்தைகள் இறப்பது). இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலை. அதே சமயம், ஒப்பீட்டளவில் ஏழ்மையான மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் IMR 37 ஆக உள்ளது. இது சூடானுக்குச் சமமான நிலை.
இருப்பினும், இந்த ஏழை மாநிலங்களின் மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், அவற்றின் ஒட்டுமொத்த இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளன. வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் உள்ள கச்சா இறப்பு விகிதம் (Crude Death Rate) — ஒவ்வொரு 1,000 பேருக்கும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கை — மத்தியப் பிரதேசத்தை விஞ்சிவிட்டது. அதற்குக் காரணம், அதன் மக்கள்தொகையில் முதியவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதுதான்.

ஒப்பீட்டளவிலான அதிக இறப்பு விகிதங்களும் குறைந்த பிறப்பு விகிதங்களும் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மக்கள்தொகையைக் குறைக்க உதவுகின்றன.
iii) மாநிலங்களுக்கிடையில் குறைந்த இடப்பெயர்வு
கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றுடன், மக்களின் நடமாட்டமும் மக்கள்தொகையின் அளவைப் பாதிக்கும் காரணியாகும். வளர்ச்சியடைந்த இடங்களில் பிறப்பு விகிதங்கள் குறையும்போது, அங்கே உழைக்கும் வயதுடையவர்கள் குடியேறுகிறார்கள். வயதானவர்களால் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க இயலாது; இந்த இழப்பும், அவர்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கத்தை ஈடுசெய்ய உதவும் முக்கியக் காரணியாக உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு உள்ளது.
இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சர்வதேச இடம்பெயர்வு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இது மக்கள்தொகையைப் பாதிக்காது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு 1,000 பேரில் ஒருவரைவிடவும் குறைவானவர்களே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதேசமயம் அண்டை நாடான இலங்கையில் ஒவ்வொரு 1,000 பேரில் மூன்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.
இந்தியாவுக்குள் நடக்கும் உள்நாட்டு இடப்பெயர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது. பத்து இந்தியர்களில் மூன்று பேர், தாங்கள் வசித்த இடத்திலிருந்து வெளியேறிக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவு, இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வின் 78ஆவது சுற்று “பன்முகக் குறிகாட்டிகள் கணக்கெடுப்பு” (Multi Indicator Survey – 2020-21) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டது.
எனினும், அதிக அளவிலான இந்த இடப்பெயர்வு, உழைப்பாளர்களை ஈர்க்கும் இந்தியாவின் வளமான மாநிலங்களின் மக்கள்தொகையையோ மக்கள்தொகையின் அமைப்பையோ கணிசமாக மாற்றும் அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை.
இந்தியாவிற்குள் இடம்பெயர்வோரில் பெரும்பாலோர் தாங்கள் முன்பு இருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது (இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இத்தகையவர்கள்). இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் அதே மாநிலத்தில் உள்ள மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள். இடம்பெயர்ந்தவர்களில் மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர்.

இந்த மாவட்டங்களுக்கு இடையேயான இடப்பெயர்வுகளுக்குப் பெண்களே முக்கியக் காரணமாக உள்ளனர். இந்தியாவில் பெண்களின் பிறந்த இடங்களுக்கு வெளியே அவர்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் குடும்பத்துடன் வாழச் செல்வது போன்ற சமூக விதிமுறைகளின் விளைவாகப் பெண்களே இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோராக இருக்கிறார்கள். பத்து சதவீதத்துக்குச் சற்று அதிகமாக ஆண்கள் இடம்பெயர்கிறார்கள். இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இடம்பெயர்கிறார்கள். பெண்கள் இடப்பெயர்வுக்கு மிகவும் பொதுவான காரணம் திருமணம். ஆண்களுக்கு வேலை தேடுவது.
இந்த வகையிலான இடப்பெயர்வு, தரவுகள் கிடைத்த கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவாகவே வளர்ந்துள்ளது. 2007-08இல் 28.5 சதவிகித இந்தியர்கள் இடம்பெயர்ந்தார்கள். இது 2020-21இல் 29.1 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்தது.
2. இந்த நடை முறைகளின் தாக்கம்
மக்கள்தொகையில் காணப்படும் இந்த மூன்று போக்குகளின் விளைவாக, இந்தியாவின் மாநிலங்கள் சற்றே மாறுபட்ட திசைகளில் நகர்கின்றன. இது வள ஒதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பான மோதல்களைத் தூண்டுகிறது. இது, மக்கள்தொகையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் அளவுகள், இந்த மாநிலங்களின் மக்கள்தொகையில் உள்ள வயதின் விகிதங்கள் ஆகிய இரண்டு அம்சங்களைக் குறிப்பாகப் பாதிக்கிறது.
i) மாநில மக்கள்தொகைகள்
1970கள்வரை இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. 1980கள்முதல் இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகின்றன.
இதன் விளைவாக, 2011க்கும் 2036க்கும் இடைப்பட்ட இந்தியாவின் மொத்த மக்கள்தொகைப் பெருக்கத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே வந்திருக்கும். இதே காலகட்டத்தில் நாட்டின் மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும்.
ராஜஸ்தான் 2017இலும், பிகார் 2023இலும் மகாராஷ்டிரத்தை விஞ்சி, உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியவில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தைவிடக் குறைவாக இருக்கும்.
தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மெதுவாக வளர்கிறது. அது மட்டுமல்ல; சில மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி முழுவதுமாக நின்றுவிடும். இந்தியாவின் மக்கள்தொகை 2060வரை தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடுத்த பத்தாண்டுகளில் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ii) இந்தியாவுக்குள் தலைமுறை இடைவெளி
தெற்கு, மேற்கு மாநிலங்கள் மெதுவாக வளர்வது மட்டுமின்றி அவற்றுக்கு மிக விரைவாக வயதாகவும் செய்யும்.
ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதுடன், பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் நிலையில் ஒரு நாட்டிற்கு வயதாகத் தொடங்குகிறது. சராசரி இந்தியரின் வயது 28க்கும் அதிகமாக உள்ளது. உலகின் சராசரி வயது 30க்கும் அதிகமாக உள்ளது. 2050க்குள் சராசரி இந்தியரின் வயது 38க்கும் அதிகமாக இருக்கும்.
இந்தியாவுக்குள் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில மாநிலங்களுக்கிடையே பத்தாண்டுக் கால வேறுபாடு உள்ளது. இதில் கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மிகவும் வயது முதிர்ந்த மாநிலங்களாகவும், பிகார் மிக இளைய மாநிலமாகவும் உள்ளன. கேரளத்தில் உள்ள மக்கள்தொகையில் முதியவர்களின் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பங்கு, பிகார் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
2030களின் நடுப்பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக வயது முதிர்ந்த மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான மாநிலங்களிலும் பிறப்பு விகிதங்களிலும் இறப்பு விகிதங்களிலும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும். விரைவில் சராசரித் தமிழ் ஆண் சராசரி பிகாரி ஆணைவிட 12 வயதுக்கும் கூடுதலாக வயதானவராக இருப்பார்.
கருவுறுதல், இறப்பு, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் ஆகியவை குறித்த தரவுகளைப் பயன்படுத்தி, 2011-2036 காலப்பகுதிக்கான மக்கள்தொகை மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அடிப்படையில் அமைந்த தரவுகள் இவை.
நாடுகள் அல்லது மாநிலங்கள் குழந்தைகள் அல்லது முதியவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும்போது — அதாவது அவை மிக இளமையாகவோ அல்லது மிக வயதானவையாகவோ இருக்கும்போது —அது அவற்றின் பொருளாதாரம் கட்டமைக்கப்படும் விதத்தைப் பாதிக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மக்கள்தொகையில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் உற்பத்திக்குப் பங்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதேசமயம், பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு — குழந்தைகளும் முதியவர்களும் — அவரவர் வீட்டிலிருந்தும் மாநிலத்திடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. 2031ஆம் ஆண்டுக்குள், பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்கள்தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாகவும் கேரளத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கும். இந்த இரண்டு மாநிலங்களிலும் உழைக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருக்கும்.
வடக்கு, கிழக்கு மாநிலங்களிலோ, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை (15-59 வயது) இன்னும் வளர்ந்துவருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தெற்கு மாநிலங்களின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை சுருங்கும். அதேசமயம், மத்திய-வடக்கு மாநிலங்களில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளரும்.
மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிட்ட இடத்தின் மக்கள்தொகையில் சார்பு விகிதம் என்னும் முக்கியக் காரணியைக் கண்காணித்துவருகிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம்தான் சார்பு விகிதம். அதிக சார்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் அல்லது நாடுகளில், உழைக்கும் வயதுடைய மக்களின் மீதும் மாநில நிர்வாகத்தின் மீதும் நிதிச் சுமை அதிகமாக இருக்கும்.

வடக்கு, கிழக்கு மாநிலங்களின் பிறப்பு விகிதங்கள் இப்போது குறைந்துவருவதால் இவற்றில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவற்றின் சார்பு விகிதங்கள் இறங்குமுகத்தில் உள்ளன. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்துவருவதால், சார்புடையவர்களை ஆதரிப்பதில் இம்மாநிலங்களின் திறன் அதிகரிக்கும். இருப்பினும், தெற்கு, மேற்கு மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, உழைப்பவர்கள் எண்ணிக்கை சுருங்குவதால், அவற்றின் சார்பு விகிதங்கள் சீராக உயர்ந்துவரும்.
3. இந்திய ஒன்றியத்திற்கான தாக்கங்கள்
நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் இந்தப் பிளவு, இந்தியாவில் கொள்கை, அரசியல் ஆகியவற்றின் இரண்டு முக்கியப் பகுதிகளில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. வளங்களைப் பகிர்ந்தளித்தல், பிரதிநிதித்துவம் ஆகியவையே அந்த இரு பகுதிகள்.
தெற்கு மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தெற்கு மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வருவாயை எவ்வாறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பது என்பது குறித்த மோதலுக்கு இது வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும் ஏழ்மையான நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிகமாகப் பங்குகள் கிடைக்கும்.
ஒன்றிய அரசு திரட்டும் வரி வருமானம் மாநிலங்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை இந்தியாவின் நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. இது வளப் பகிர்வுக்கான சூத்திரம் (devolution formula) எனப்படுகிறது. தாங்கள் முக்கிய வருவாய் பங்களிப்பாளர்களாக இருந்தபோதிலும் நிதி ஆணையத்தின் வளப் பகிர்வுக்கான சூத்திரம் தங்களுக்குத் தண்டனை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெற்கு மாநிலங்கள் வாதிடுகின்றன. குறிப்பாக 15ஆவது நிதி ஆணையத்தின் (2020-26) கீழ் தாங்கள் பாதிக்கப்படுவதாக அவை கூறுகின்றன.
அதிக மக்கள்தொகையும் குறைந்த தனிநபர் வருமானமும் கொண்ட மாநிலங்கள் அதிகப் பங்கைப் பெறுவதால் தெற்கு மாநிலங்கள் குறைவான பங்கைப் பெறுகின்றன என்பது முக்கியமான புகார். 14ஆவது ஆணையத்தின் கீழ் ஐந்து தெற்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த பங்கு 18.6 சதவிகிதமாக இருந்தது. இது 15ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 15.8 சதவிகிதமாகக் குறைந்தது. மத்திய வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் (cesses and surcharges) ஆகிய கூடுதல் வரிகளின் பங்கு வளர்ந்துவருகிறது. இது பிரச்சினைக்குரிய மற்றொரு புள்ளியாக அமைகிறது.
ஒன்றிய அரசாங்கம் இந்தக் கட்டணங்களை (இது மொத்த வரி வசூல்களில் 10-15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்) மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. தெற்கு மாநிலங்களின் தலைவர்கள், சரக்கு மற்றும் சேவை வரிக்கும் (ஜிஎஸ்டி) நேரடி வரிகளுக்கும் தாங்கள் பெரிய அளவில் பங்களித்தாலும், அதற்கு ஈடான மறுபகிர்வு நிதியைப் பெறுவதில்லை என்றும் இது தங்களுக்குப் பாதகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினையும் உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பின் பிரிவு 81இன்படி, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசாரமாக மக்களவையில் இடங்களைப் பெற வேண்டும்; மக்களவைத் தொகுதிகள் கிட்டத்தட்ட சம அளவில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. இது தற்போது 545ஆக உள்ளது.
இந்த இடங்களை மாநிலங்களுக்கிடையில் விகிதாசாரமாகப் பிரிக்க வேண்டும். அரசியலமைப்பின் பிரிவு 82இன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடங்களை மறுஒதுக்கீடு செய்ய வேண்டும். 1976இல் இந்தியாவில் அவசரகால நிலைமையின்போது குடிமைச் சுதந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது 42ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புவரை இடங்களை மாற்றியமைப்பது நிறுத்திவைக்கப்பட்டது. 2002இல் நாடாளுமன்றம் 84ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, இந்த முடக்கத்தை 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அடுத்த பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027இல் நடத்தப்பட உள்ளது.
அந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை (delimitation) நடக்கும்போது வடக்கு மாநிலங்களின் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். தெற்கு மாநிலங்களுக்கான இடங்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப அமையும்போது அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும். இந்த வகையான மறுசீரமைப்பிற்கான வலுவான எதிர்ப்புக் குரல்களைத் தென் மாநிலங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது தங்கள் வளர்ச்சிக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கும் அளிக்கும் தண்டனை என்று அம்மாநிலங்கள் கூறிவருகின்றன.
இந்திய ஒன்றியத்திற்கான இந்தச் சவால்களைத் தவிர, தெற்கு மாநிலங்கள் வளர்ந்துவரும் சார்பு விகிதங்களையும் இதனால் மாநில நிதி நிலைமையில் ஏற்படும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை தெற்கைக் காட்டிலும் வடக்கிலிருந்து அதிகமாக வர அதிக வாய்ப்புள்ளது என்பதால், தெற்கு மாநிலங்கள் மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தங்கள் கடுமையான விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். அதேசமயம், இந்தியாவின் வடக்கு மாநிலங்களின் தற்போதைய தொழிலாளர்களுக்கும் வருங்காலத் தொழிலாளர்களுக்கும் எதிர்கால வேலைத்தளங்களுக்குத் தேவையான திறன்களைச் சிறப்பாக வழங்குவதன் அவசியம் முன்னெப்போதையும்விட முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் முக்கியமான நேரத்தில் வந்துள்ளன. இனப்பெருக்க உரிமைகள், பெண்களின் உரிமைகள், எதிர்காலத் தொழிலாளர் சந்தைகள் குறித்த அடிப்படையான சிந்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இவை வழங்கக்கூடும். இவை நாடு முழுவதும் உள்ள குடிமக்களை உசுப்பிவிடக்கூடிய பொதுவான சவால்களாகும். ஆனால் இந்த மாபெரும் வேறுபாடுகளை அரசியல் லாபத்திற்காக இனரீதியான பிளவுகளை உருவாக்கவும் பயன்படுத்த முடியும். இந்தப் பிளவுகள் மேலும் அதிகரித்து, நீடித்த சேதத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அபாயகரமான அளவில் வெளிப்படையாக உள்ளது.
இந்தியாவும் இந்தியர்களும் இந்த மக்கள்தொகைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது இந்திய ஜனநாயகத்தின் போக்கையும் தீர்மானிக்கும்.
கட்டுரையாளர்:
ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
தமிழில்: டி.ஐ. அரவிந்தன்
நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம்
இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது.
