ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலைவாசி உயர்வை எதிர்த்து, ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலைகளில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு, அரசு மற்றும் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதள பதிவில்,
“ஈரானிய மக்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அமைப்புகளை கைப்பற்றுங்கள். கொலைகாரர்கள் மற்றும் கொடுமைக்காரர்களின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இதற்கான பெரிய விலையைச் செலுத்த வேண்டி வரும்.
போராட்டக்காரர்கள்மீது நடைபெறும் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடன் நடைபெறவிருந்த எனது அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளேன். உதவி வந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாக, ஈரான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு முறையாக எழுதிய கடிதத்தில்,
“அமெரிக்கா வன்முறையைத் தூண்டிவிடுவதுடன், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது. ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறது. டிரம்பின் பேச்சுகள் ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைய காரணமாகியுள்ளது. இது ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வெளிப்படையான அச்சுறுத்தலாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படும் சூழலில், அந்நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
