இந்த 2025ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பாஸ்போர்ட் சேவைகளை வழங்குகிறது. மேலும், ஆதார் சேவைகள், தேசியக் கொடி விநியோகம், வேலைவாய்ப்பு திட்ட சரிபார்ப்பு, பிஎஸ்என்எல் சேவைகள் மற்றும் ரஷ்யாவுடன் சர்வதேச அஞ்சல் ஒப்பந்தம் என பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவைகள் அனைத்தும் மக்களின் வசதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.
வெளியுறவு அமைச்சகம் அஞ்சல் துறையுடன் இணைந்து, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை (POPSK) அமைத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட் சேவைகள் கிடைக்கின்றன. 30.11.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 452 மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட 10 மையங்கள் ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை தொடங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு தேவையான சேவைகளை எளிதாக வழங்கும் நோக்கில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 13,352 ஆதார் மையங்கள் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. அக்டோபரில் நடந்த தேசிய அஞ்சல் வாரத்தின் போது பள்ளிகளில் 1,552 ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளின் பயோமெட்ரிக் அடையாளங்கள் புதுப்பிக்கப்பட்டன.
இந்த முகாம்கள் மூலம் 4,335 புதிய ஆதார் சேர்க்கைகளும், 35,606 ஆதார் புதுப்பிப்புகளும் செய்யப்பட்டன. ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை, 2.35 கோடிக்கும் அதிகமான ஆதார் சேர்க்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் நடந்துள்ளன. இதன் மூலம் ரூ. 129.13 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
‘இல்லம் தோறும் மூவண்ணக் கோடி’ பிரச்சாரம் 4.0-ன் கீழ், 2025ஆம் ஆண்டில் அஞ்சல் துறை 28,13,627 தேசியக் கொடிகளை விநியோகித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்தக் கொடிகள் கிடைத்தன. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு மானியம் கிடைப்பதை உறுதி செய்ய, அஞ்சல் துறைக்கும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் இடையே 20.08.2024 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் திட்ட அலகுகள் நேரடியாக சரிபார்க்கப்படுகின்றன. ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை, 1,69,368 திட்ட அலகுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகளை வழங்க அஞ்சல் துறை பிஎஸ்என்எல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் 1.64 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையும் ரஷ்ய அஞ்சல் துறையும் இணைந்து, சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவை (ITPS) ஒப்பந்தத்தில் டிசம்பர் 4, 2025 அன்று கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே பார்சல்களை அனுப்புதல், கையாளுதல், கண்காணித்தல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றை நிர்வகிக்கும். இது இரு நாடுகளின் அஞ்சல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இதுபோன்ற பல சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது.
