சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 3 மணியிலிருந்து தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் கடற்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியை மேம்படுத்துதல், பெண்களின் பங்கேற்பு மற்றும் பாலின சமத்துவத்தை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் போன்ற தன்னார்வ நடவடிக்கைகளை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்திய கடற்படை சென்னையில் முதன்முறையாக மாரத்தான் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, “இந்திய கடற்படை ஹாஃப் மாரத்தான் 2025” நிகழ்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ இந்திய கடற்படை மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சிறப்பு ஏற்பாடாக சென்னை மெட்ரோ இரயில் சேவை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்படும். இந்திய கடற்படை முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, நிகழ்வு நடைபெறும் நாளில் பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தடையில்லா பயணத்தை மேற்கொள்ளும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
– அதிகாலை 3:00 மணி முதல் காலை 5:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி இரயில் சேவை காலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை இயங்காது.
மேற்கண்ட நேரங்களில் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி வழக்கமான இரயில் சேவைகள் காலை 5:00 மணி முதல் இயக்கப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ இரயில் சேவைகளும் காலை 5:00 மணி முதல் வழக்கம் போல் இயங்கும்.
அனைத்து பயணிகளும் மாரத்தான் பங்கேற்பாளர்களும், மெட்ரோ இரயில் நிலைய பயணச்சீட்டு கவுண்டர்கள் மற்றும் online தளங்கள் மூலம் மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கலாம்.
மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டணங்கள் தற்போதுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் விதிமுறைகளின் படி வசூலிக்கப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்த உயர்ந்த பொதுநல நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான மாரத்தான் அனுபவத்திற்கு எங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு, பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளத்தை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
