இந்தியா – பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்திய தொழில் துறை வரலாற்றில் முக்கிய மைல்கல் என்று கோவை திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, பிரிட்டனில் அந்நாட்டின் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்தியா -பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜெனார்த்தன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கு விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இங்கிலாந்து சந்தையில் பல பொருட்களுக்கு 99 சதவிகிதம் வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 2030க்குள் இரு நாடுகளின் வர்த்தக மதிப்பை 120 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் என்பது இரு நாடுகளின் தொழில் துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரிட்டனில் இருந்து மருத்துவ சாதனங்கள், விமான உதிரிபாகங்கள் ஆகியவை குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும்.
குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட், பிஸ்கெட், கார்கள் மீதான வரிகள் 15%-ல் இருந்து 3 சதவிகிதமாக குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகளுக்கான வரியும் குறைவதால் வர்த்தகம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தின் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி அதிகரிப்பதோடு ஏற்றுமதியும் இரட்டிப்பாக மாறும் என்று தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

80 சதவிகித பெண்களுக்கு வேலைவாய்ப்பு
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், “இந்தியா- பிரிட்டன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதி எல்லா துறைகளிலும் அதிகரிக்கும். குறிப்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி 1.8 பில்லியன் என்பது 3 பில்லியனாக உயரும். அதே போல் பின்னலாடை ஏற்றுமதி 0.8 பில்லியனில் இருந்து 2 பில்லியனாக உயரும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமாக 80 சதவிகிதம் பெண்கள் பயனடைவர். இந்த ஒப்பந்தத்திற்காக வெகுநாளாக காத்திருந்தோம்” என்றார்.
தமிழகத்திற்கு 40 சதவிகித பலன்
இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபுதாமோதரன் நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “எளிதில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்கள் முதல் அனைத்து உள்ளீட்டு பொருட்களும் இந்தியாவிலேயே கிடைக்கிறது. இதை பிரிட்டன் வர்த்தகர்கள் சாதகமாக பார்க்கின்றனர். இந்த சூழலில் பிரிட்டனுடனான இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் சர்வதேச ஜவுளி சந்தையில் 6 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா மிக விரைவில் 10 சதவிகிதத்தை எட்ட வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆண்டுக்கு ரூ.7000 கோடி வரை கூடுதல் வர்த்தகம் இந்தியாவிற்கு கிடைக்கும். இதில் 40 சதவீதம் வரை தமிழகத்திற்கு கிடைக்கும்” என்கிறார்.