“பத்து ரூபா டிக்கெட் இருந்தா போதும்… ஊர் பூரா சுத்தி வரலாம்” என்று பெருமை பேசும் நம்ம ஊர் தபால்துறை, இப்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எனக்கு எக்ஸாம் எழுத பயம்… இங்கிலீஷ் பேச வராது” என்று ஒதுங்கி நிற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
இந்திய அஞ்சல் துறை (India Post) 2026ஆம் ஆண்டிற்கான கிராமின் டாக் சேவக் (GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 28,740 காலியிடங்கள் (Vacancies) நிரப்பப்பட உள்ளன. இதில் நமக்கு என்ன ஸ்பெஷல் என்றால், தமிழகத்திற்கு மட்டும் சுமார் 2,009 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
என்ன வேலை? கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் கிளை அஞ்சல் அதிகாரி (BPM), உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ABPM) மற்றும் அஞ்சல் சேவகர் (Dak Sevak) ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. இது மத்திய அரசு வேலை என்றாலும், சொந்த ஊர் பக்கத்திலேயே வேலை பார்க்க முடியும் என்பது கூடுதல் பிளஸ்!
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி (Pass) பெற்றிருந்தால் போதும். (கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் பாஸ் செய்திருக்க வேண்டும்).
- வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு).
- கூடுதல் தகுதி: சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
செலக்ஷன் எப்படி? இங்குதான் ட்விஸ்ட்! எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது; நேர்காணலும் கிடையாது. நீங்கள் 10ஆம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே ‘மெரிட் லிஸ்ட்’ (Merit List) தயார் செய்யப்பட்டு வேலை வழங்கப்படும். அதாவது, மார்க் அதிகம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை!
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 31, 2026
- கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026 (காதலர் தினத்தோட முடியுது பாஸ்!)
- மெரிட் லிஸ்ட் வெளியீடு: பிப்ரவரி 28, 2026
10ஆவதுல நல்ல மார்க் வச்சிருக்கியா? அப்போ யோசிக்காம அப்ளை பண்ணுங்க. போன வருஷம் கட்-ஆஃப் (Cut-off) கொஞ்சம் அதிகமா இருந்தது உண்மைதான். ஆனா, இந்த முறை தமிழகத்துல 2000+ இடங்கள் இருக்கு. அப்ளை பண்ணும்போது, உங்க சொந்த ஊர்ல காலி இடம் இருக்கானு பார்த்துப் போடுங்க. அப்படி இல்லனா, பக்கத்து மாவட்டத்துல எங்க வேகன்சி அதிகமா இருக்கோ, அங்க போடுறது புத்திசாலித்தனம். சர்வர் பிஸி ஆகுறதுக்கு முன்னாடி, ஜனவரி 31-க்கே வேலையை முடிச்சிருங்க!
