பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று தாக்குதல் நடத்தியது. India launches 24 missiles in 25 minutes
மொத்தம் 9 இடங்களில் மே 7 அதிகாலை 1.05 முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது.
ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
இந்த இடம் பாகிஸ்தானின் எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முசாபராபாத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் ஆகும்.
சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
இந்த இடம் பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ளது. இது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பயிற்சிக்கான மையமாக இருந்து வந்துள்ளது.
குல்பூர் முகாம் ஹிஸ்புல் முஜாஹிதீன்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கோட்லியில் செயல்பட்டு வருகிறது. எல்.இ.டி.யின் தளமாக செயல்பட்டு வந்தது. இது ஏப்ரல் 20, 2023 அன்று பூஞ்சில் நடந்த தாக்குதலிலும் , ஜூன் 9, 2024 அன்று அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையமாக செயல்பட்டு வந்துள்ளது.
பர்னாலா முகாம்
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள பீம்பரில் உள்ளது. இது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கையாளும் மையமாகவும் இருந்துள்ளது.
மர்கஸ் அப்பாஸ், கோட்லி
லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலை படையினருக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 தீவிரவாதிகள் இங்கு பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர்.
சர்ஜால் முகாம்
சியால்கோட்டில் உள்ளது. மார்ச் 2025 இல் 4 ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரைக் கொன்ற பயங்கரவாதிகள், இந்த முகாமில்தான் பயிற்சி பெற்றனர்.
மெஹ்மூனா ஜோயா முகாம்
ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் கோட்டையாக இருந்தது. சியால்கோட்டில் செயல்பட்டு வந்த இந்த முகாமில் இருந்துதான் பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையமாக இருந்தது. அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி உள்ளிட்ட தீவிரவாதிகள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.
மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமாகும். இது தீவிரவாதிகள் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனை மையமாக இருந்து வந்துள்ளது.
சுமார் 25 நிமிடங்களில் 24 ஏவுகளை ஏவி இந்தியா தாக்குதல் நடத்தியதில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை. India launches 24 missiles in 25 minutes