ஏற்கனவே இந்திய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் இருக்கும் நிலையில்… இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று டெல்லியில் (ஏப்ரல் 28) கையெழுத்தானது.
இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.63,000 கோடி ஆகும்.

இதுகுறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“இந்த ஒப்பந்தத்தில் பயிற்சி அளித்தல், உபகரணங்கள், சிமுலேட்டர், ஆயுதங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போக்குவரத்து ஆகியவை உள்ளடங்கும்.
இதில் இந்திய விமானப்படையின் தற்போதுள்ள ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தின் கையொப்பமிடப்பட்ட நகல்கள், இன்று (2025 ஏப்ரல் 28) டெல்லியில் உள்ள நவசேனா பவனில் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்திய – பிரான்ஸ் அதிகாரிகளால் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தற்சார்பு இந்தியா மீதான அரசின் உந்துதலுக்கு ஏற்ப, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் உள்நாட்டு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்றமும் அடங்கும்.
இந்தியாவில் ரஃபேல் பாகங்களுக்கான உற்பத்தி வசதியை அமைப்பது, விமான இன்ஜின், சென்சார்கள், ஆயுதங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு வசதிகளை அமைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தம் ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளித்து, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவாயையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சின் டசால்ட் ஏவியேஷனால் தயாரிக்கப்படும் ரஃபேல்-மரைன் என்பது கடல்சார் சூழலில் சிறந்த செயல்பாட்டு திறன்களைக் கொண்ட போர் விமானமாகும். இந்த ஒப்பந்தப்படி விமானங்களின் விநியோகம் 2030-க்குள் நிறைவடையும்.
இந்திய விமானப்படையால் இயக்கப்படும் ரஃபேல் போர் விமானத்துக்கும் ரஃபேல் – மரைனுக்கும் ஒற்றுமை உண்டு. இதன் கொள்முதல் கூட்டு செயல்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகிய இரண்டிற்கும் விமானங்களுக்கான பயிற்சியையும் செயல்பாட்டையும் மேம்படுத்தும். இது கடலில் நாட்டின் விமான சக்தியை கணிசமாக அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஃபேல் விமானங்கள் விமானப் படைக்காக வாங்கப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியில் மாற்றியதாக மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.
இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தை ரபேல் உற்பத்தியில் இருந்து ஒதுக்கிவிட்டு, டஸ்ஸோ நிறுவனத்தை புதிதாக நிறுவப்பட்ட, முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் கை கோர்க்குமாறு இந்திய அரசு வலியுறுத்தியதாக சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்ற தீர்ப்பளித்தது.