டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று மார்ச் 8–ந் தேதி மோதின. குஜராத் மாநிலம் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், நியூசிலாந்து அணியின் பந்துகளை வெளுத்தெடுத்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் மூவரும் சரவெடியாக வெடித்தனர். இதனால் மைதானத்தில் ரன்கள் மழையாக பொழிந்தன. சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இஷான் கிஷான் 25 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். அபிஷேக் சர்மா, 21 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.
ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இதனால் 19 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழநதது. நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வாகை சூடியது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி 3-வது முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையை அதிகம் வென்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் இந்த சரித்திர சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகன்ற திரையில் ஒளிபரப்பானது; இந்திய அணியின் வெற்றியை மெரினா கடற்கரையில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
