முடி உதிர்தலை சரிசெய்து, வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பழங்கள் குறித்து பார்க்கலாம்.
முடி உதிர்தல், முடி உடைதல் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அனைவரும் பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். இதற்காக பல்வேறு பொருட்கள் முடிக்கு பயன்படுத்துகிறோம். விலை அதிகமான பொருட்கள் வாங்கி பயன்படுத்தினாலும் அது ஏன் பலனளிக்கவில்லை என்று நாம் அனைவரும் ஆச்சரியப்படுகிறோம். பெரும்பாலும், ஊட்டச்சத்து குறைபாடுகள் தான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன. அதற்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டாலே முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும். முடி உதிர்வு பிரச்சனைக்கு சில பழ வகைகளை நாம் பயன்படுத்தலாம். என்னென்ன பழங்கள், காய்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
நெல்லிக்காய் (Gooseberry): நெல்லிக்காய் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் பொருளாக உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது உடலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது முடியின் இயற்கையான கருப்பு நிறத்தை பராமரிக்க உதவுகிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கும்.
வாழைப்பழம் (Banana): வாழைப்பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். வாழைப் பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, ஸ்கால்ப்பை ஈரப்பதமாக்க உதவுகின்றன. வாழைப்பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உங்கள் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இது வறண்ட முடியைத் தடுக்க உதவும்.
ஆரஞ்சு பழம் (Orange): குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்கள் சந்தைகளில் எளிதாகவே கிடைக்கின்றன. இதில் வைட்டமின் சி மற்றும் பயோஃப்ளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்களுக்கு ஏராளமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அவற்றை உட்கொள்வது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது முடி உமற்றும் முடி உதிர்தலைக் குறைக்கிறது.
பப்பாளி (Papaya): பப்பாளியில் “பப்பேன்” என்ற நொதி உள்ளது. அதாவது, இது அடிப்படையில் வைட்டமின் ஏ ஆகும். இது உச்சந்தலையில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்ய உதவுகிறது. பப்பாளி சாப்பிடுவது கூந்தலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை அளிக்கிறது. அத்துடன், உயிரற்ற மற்றும் வறண்ட கூந்தலுக்கு புதிய பளபளப்பை அளிக்கிறது.
மாதுளை: மாதுளை பழத்தில் முடியின் நுண்குழாய்களை வலுப்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது முடி மெலிவதை தடுக்க உதவும். இந்த பழம் முடியின் அடர்த்தியையும் அதிகரிக்கிறது. மாதுளை சாப்பிடுவது முடியை அடர்த்தியாகவும், நிறைவாகவும் காட்டும்.
ஆப்பிள்: ஆப்பிள் பழத்தில் பயோட்டின் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. முடியின் மேற்பகுதியை அவை வலுப்படுத்த உதவுகின்றன. தினமும் ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் நன்மை பயக்கும். முடி உடைதல் மற்றும் முடி உதிர்வையும் தடுக்கிறது.
