ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: பொறுப்பு டிஜிபி வெங்கடராமன்- யார் இவர்? தேர்வானது எப்படி? சுவாரசிய பின்னணி!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் ‘தலைமை செயலகம்’ ரொம்ப பரபரப்பாக இருக்கிறதே என சொல்லியபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் வெளிநாடு பயணம் போவதால்தானா?

ADVERTISEMENT

அதுமட்டுமல்ல.. எல்லோரது கண்களும் கவனித்த டிஜிபி நியமன விவகாரமும்தான்..

புதிய டிஜிபியா? பொறுப்பு டிஜிபியா?

ADVERTISEMENT

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதால் 3 மாதங்களுக்கு முன்னரே மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு பட்டியலை அனுப்பி இருக்க வேண்டும்; அந்த பட்டியல் தாமதமாகத்தான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில்

ADVERTISEMENT

சீமா அகர்வால்
ராஜீவ் குமார்
சந்தீப் ராய் ரத்தோர்
அபய்குமார் சிங்
வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால்
வெங்கடராமன்
வினித் வான்கடே
சஞ்சய் மாத்தூர்

ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழக அரசின் இந்த பட்டியல் லேட்டாகத்தான் டெல்லிக்கு போனது.. டெல்லியில் இருந்து புதிய டிஜிபி பதவிக்கான 3 பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் எப்போ வரும்னு தெரியாது.. அதனால தற்போதைக்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

ஓஹோ?

கோட்டை வட்டாரங்களில், சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால், ராஜீவ் குமார்.. இந்த மூவரில் ஒருவர் புதிய டிஜிபியாக நியமிக்கப்படலாம் என ஆலோசிப்பதை நமது மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதி வந்தோம். இந்த ரேஸில் அவ்வப்போது யார் முந்தி கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஏற்கனவே விலாவாரியாக விவரித்திருந்தோம்.

மத்திய அரசிடம் இருந்து புதிய டிஜிபிக்கான மூவர் பட்டியல் வரும் வரை பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்படுகிறார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றுவிட்டார் வெங்கடராமன்.

யார் இந்த வெங்கடராமன்?

ரொம்ப நேர்மையான, துணிச்சலான அதிகாரி என பெயர் எடுத்தவர். மயிலாடுதுறையில் பிறந்த வெங்கடராமன், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை போஸ்ட் மேன் -ஆக பணிபுரிந்தவர். அவர், மறைந்த துக்ளக் ஆசிரியர் ‘சோ’-வின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.

அப்படியா? வெங்கடராமனை எப்படி செலக்ட் செய்தாராம் சிஎம் ஸ்டாலின்?

பொறுப்பு டிஜிபி பதவிக்கு முதலில் விஜிலென்ஸ் டைரக்டர் அபய்குமார் சிங் பெயர்தான் பரிசீலனை செய்யபட்டதாம்.. ஆனால் 3 மாதத்தில் தாம் பணி ஓய்வு பெற இருப்பதால் பொறுப்பு டிஜிபி பதவிக்கு விருப்பம் இல்லை என சொல்லிவிட்டார் அபயகுமார் சிங்.

இதன் பின்னர்தான் வெங்கடராமன் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

1994-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான வெங்கடராமன், திருச்செந்தூரில் ASP-யாக பணியை தொடங்கியவர். அங்கு கள்ளச்சாராயம் மற்றும் சமூக விரோத செயல்களைத் தடுக்க தனியாக ரோந்து சென்று கட்டுப்படுத்தியவர் என்ற பெயர் பெற்றவர்.

2000-ம் ஆண்டில் பெரம்பலூர் எஸ்.பி.யாக இருந்த போது, ஆண்டிமடம் கோவில் ஒன்றில் சிபிஎம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்க நிர்வாகி திருநாவுக்கரசர் தலைமையில் தலித்துகள் கோவில் நுழைவுப் போராட்டம் நடைபெற இருந்தது. இதற்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. வட தமிழ்நாட்டில் ஜாதிவன்முறை வெடிக்கும் அபாயகரமான சூழலில் எஸ்பியாக இருந்த வெங்கடராமன், இருதரப்பினரிடமும் இடைவிடாமல் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை உருவாக்கினார்; தலித்துகளும் கோவிலில் வழிபாடு நடத்தினர். அப்போது முதல்வராக இருந்த கலைஞர், எஸ்பி வெங்கடராமனை வெகுவாகப் பாராட்டினார்.

ஓஹோ…?

வெங்கடராமன் பற்றிய இன்னொரு சுவாராசியமும் இருக்கிறது. இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கக் கூடிய ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது இப்போதும் பரபரப்பாக பேசப்படுகிறதே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு.. இந்த வழக்குகளைப் போடப்பட்டதே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 6 ஆண்டுகள் (2011-2017)-ல் ஐஜியாக வெங்கடராமன் பணிபுரிந்த காலத்தில்தான்.. இதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டு கூட பெற்றவர்..

ஆஹா.. ரொம்பவே சுவாரசியம்தான் போங்க..

சிபிஐயில் சில காலம் பணியாற்றியவர் வெங்கடராமன்.. இன்றைக்கும் டெல்லி சிபிஐ அலுவலகத்துடன் இணக்கமான உறவில் இருக்கிறார் வெங்கடராமன். இந்த பின்னணி எல்லாம் அலசி ஆராயப்பட்டு. நேர்மையாக செயல்படுவார் என்ற அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்படுகிறார் வெங்கடராமன்.

பொறுப்பு டிஜிபி பதவின்னா நீதிமன்ற சிக்கல் எல்லாம் வருமே?

டிஜிபி நியமனம் பற்றி ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கு… அப்போது கூட, முறையாக டிஜிபியை நியமிக்காவிட்டால் நாங்க தலையிடுவோம் என நீதிபதிகள் சொல்லி இருந்தாங்க..

பொறுப்பு டிஜிபி நீண்டகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அரசும் உணராமல் இல்லை.. உச்சநீதிமன்றம் இந்த விவகாரங்களில் கறாரான உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பிச்சிருக்கு என்பது கோட்டை வட்டாரங்களுக்கு தெரியாமலும் இல்லை..

அதனால, டெல்லி பட்டியல் வந்த உடன் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால், ராஜீவ் குமார் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம்; அல்லது வெங்கடராமனே பொறுப்பு டிஜிபியாக நீடிக்கட்டும் எனவும் முடிவெடுக்கலாம்.. நீதிமன்றத்துக்கு யாரேனும் போனாலும் அதையும் சமாளிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறதாம் கோட்டை அதிகார வட்டாரங்கள்

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு ஓய்வு பெறும் நாளில் புதிய பதவியாமே?

ஆம்.. சங்கர் ஜிவால் இன்று ஆகஸ்ட் 29-ந் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போதே, தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்து ஆர்டர் வெளியாகிவிட்டதே…

டிஜிபி நியமன விவகாரத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்; பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.. அரசு தரப்பில் பொறுப்பு டிஜிபி நியமன அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது எதிர்க்கட்சிகள் ‘வரிந்து கட்ட’ சான்ஸ் இருக்கிறது என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share