சத்தீஸ்கரில் இன்று (அக்டோபர் 16) ஒரே நாளில் 170 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தினர் அடுத்தடுத்து ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தீவிரமடைந்ததால் ஆயுதங்களை மவுனிக்கச் செய்துவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நக்சலிசத்துக்கு (மாவோயிஸ்டுகள்) எதிரான போர்க்களத்தில் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளோம்.
சத்தீஸ்கரில் இன்று 170 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் நேற்று 27 பேரும் மகாராஷ்டிராவில் 61 பேரும் சரணடைந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 258 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் Abujhmarh, North Bastar ஆகிய பகுதிகள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்கிறோம்.
சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தாரில் இருந்தும் மாவோயிஸ்டுகளை முழுவதுமாக விரைவில் அழிப்போம்.
2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சத்தீஸ்கரில் பாஜக அரசு அமைந்தது முதல் 2100 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்; 1785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் மாவோயிஸ்டுகள் முழுவதுமாக அழிக்கப்படுவர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.