சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனை பகுதியில் 11 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை விடை பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று முதலே வடசென்னை பகுதியில் கனமழை கொட்டியது.
சென்னை பாரிமுனை பகுதியில் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 11 செ.மீ. மழை கொட்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.