ஊர்க்காவல் படைக்கு நடந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வந்த பெண் ஆம்புலன்ஸில் செல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயா பகுதியில் ராணுவ காவல் மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்சேர்ப்பு தேர்வு முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி நடந்தது.
அதில் பங்கேற்ற 26 வயதான் பெண் ஒருவர் உடல் தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து தேர்வு நடக்கும் இடத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முகாம் ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது மயங்கிய நிலையில் இருந்த தன்னை, பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து புத்த கயா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர் அஜித் குமார் இருவரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்பட்ட இரண்டு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்புலன்சில் மேலும் சிலர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. சிராக் பாஸ்வான், பீகாரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மாநில காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.