40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய முக்கியமான மருத்துவப் பரிசோதனைகள் (Medical Tests) சில உள்ளன.
வாழ்க்கையில் 40 வயது தொட்டதும் நமது உடல்நிலை சில சமிக்ஞைகளை நமக்குத் தரும். அது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக 40 வயது என்பது வாலிபப் பருவம் முடிந்து நடுத்தர வயதில் அடியெடுத்து வைக்கும் சமயம். 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன. வழக்கமாக செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள், அறிகுறிகளும் தோன்றுவதற்கு முன்பே உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன.
முன்கூட்டியே பரிசோதனை செய்வது நோய் இருந்தால் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு நல்ல பலனைத் தருவதோடு, நீடித்த நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். ஆகவே, பின்வரும் மருத்துவப் பரிசோதனைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் 40 வயதை அடைந்த பிறகு மக்களுக்கு அவை தேவைப்படுகின்றன.
ரத்த அழுத்த பரிசோதனை:
ரத்த அழுத்த பரிசோதனை (blood pressure test) என்பது உடல்நலப் பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிய உதவுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ரத்த அழுத்த பரிசோதனை முடிவுகள் மூலம் அறியலாம். இதன்மூலம் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும்.
லிப்பிட் ப்ரோபைல்:
லிப்பிட் ப்ரோபைல் (lipid profile test) எனப்படும் கொழுப்பு பரிசோதனையானது LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால், HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவீடுகளை துல்லியமாக வழங்க உதவுகிறது. அதிக கொழுப்பு என்பது இதய நோய், பக்கவாதத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. 40 வயதுக்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் லிப்பிட் ப்ரோபைல் சோதனை செய்ய வேண்டும்.
ரத்த சர்க்கரை பரிசோதனை:
40 வயதுக்குப் பிறகு மக்கள் சர்க்கரை நோய் பரிசோதனைகளை செய்ய வேண்டும். மருத்துவர்கள் ப்ரீடயபடிக் எனப்படும் சர்க்கரை நோய்க்கு (blood sugar test) முந்தைய நிலை, ஆரம்பகட்ட நிலை ஆகியவற்றை கண்டறிய வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த பரிசோதனை மற்றும் HbA1c சோதனைகள் கண்டறியும். இது உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க அல்லது அதிகரிக்காமல் தடுக்க உதவி புரிகிறது.
சிபிசி பரிசோதனை:
சிபிசி எனப்படும் முழுமையான ரத்த எண்ணிக்கை பரிசோதனை (complete blood count) என்பது சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகிய விவரங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. இதன்மூலம் தொற்று நோய், அழற்சி, ரத்த சோகை, ரத்த பிரச்சனைகளை கண்டறிய உதவுகிறது.
கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டு சோதனை:
கல்லீரல் (liver function test) மற்றும் சிறுநீரக (Kidney function test) செயல்பாட்டு சோதனை மிகவும் முக்கியமானது. இவை கொழுப்பு கல்லீரல் நோய், சிறுநீரக பிரச்சனைகளை அறிந்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக சிறுநீரக, கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே பரிசோதனை மூலம் அவற்றை தெரிந்துகொள்ளும்போது சிகிச்சை அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.
இதயப் பரிசோதனை:
இசிஜி, எக்கோ பரிசோதனைகளை (ecg and echo test) வருடத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுப்பது மிகவும் நன்மை அளிக்கிறது. இதய நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு போன்ற ஆபத்துக்களைத் தடுக்க முடியும்.
