முடியின் வளர்ச்சி, இளநரை நீங்க, முடிக்கு ஊட்டமளிக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றிய லிஸ்ட்டை பார்க்கலாம்.
முடி உதிர்தல் மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகளால் நம்மில் பலரும் அவதியுற்று வருவோம். மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையே முடி தொடர்பான (Hair Problems) பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் டி, பயோட்டின் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள் முடி உதிர்தல் மற்றும் முடி மெலிதலுக்குக் காரணமாகலாம். இதனை சரி செய்ய விலை உயர்ந்த ஷாம்புகள், கண்டீஷனர்களை பயன்படுத்துகிறார்கள்.
விலையுயர்ந்த முடிப் பராமரிப்பு பொருட்களை விட, நாம் சாப்பிடும் உணவே முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பல ஊட்டச்சத்துக்கள் அவசியப்படுகின்றன.முட்டை, கீரை மற்றும் கருப்பு எள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம், முடி மெலிதல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.
இளநரை நீங்கி முடி கருப்பாக மாற
உடலில் உள்ள மெலனோசைட்டுகளின் செயல்பாடு குறைந்து, மெலனின் உற்பத்தியும் குறைவதால், முடி அதன் இயற்கையான நிறத்தை இழக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், மயிர்க்கால்களுக்குப் போதுமான ஊட்டச்சத்தை அளித்து, இயற்கையான நிறத்தைப் பராமரிக்க உதவுகின்றன. இவை கருப்பு எள்ளில் அதிகமாக உள்ளன. தினமும் உணவில் சிறிதளவு கருப்பு எள்ளைச் சேர்த்துக்கொள்வது, நரை முடிப் பிரச்சனையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், முடிக்கு நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.
முடி உதிர்வைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும்?
அதிகப்படியான முடி உதிர்வது குறித்துப் பலர் கவலைப்படுகிறார்கள். முடி முக்கியமாக கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. உடலில் புரதக் குறைபாடு ஏற்படும்போது, முடி பலவீனமடைந்து எளிதில் உதிர்ந்துவிடும். முட்டைகளில் அதிக அளவில் புரதமும் பயோட்டினும் உள்ளன. தினமும் ஒரு வேகவைத்த முட்டையை உட்கொள்வது மயிர்க்கால்களை வலுப்படுத்துவதோடு, முடி உதிர்வையும் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், இது முடிக்குத் தேவையான இயற்கையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. குறிப்பாக, முட்டைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கூறுகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
முடி மெலிவதை தடுக்க எதை சாப்பிடலாம்?
முடி மெலிதல் தலையில் முடி குறைவதற்கும் வழுக்கைக்கான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும். இதற்கு முக்கிய காரணம் உடலில் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம். கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி அடர்த்தியாக வளர உதவுகின்றன. பொடுகு என்பது முடியின் வேர்களை பலவீனப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்கிறது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் பொடுகைக் குறைக்க உதவுகின்றன. இது உச்சந்தலையை சுத்தமாக வைத்து, நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
முடி நீளமாக வளர என்ன சாப்பிடுவது? :
முடியின் பிளவுபட்ட முனைகள் நீளமாக வளர்வதைத் தடுக்கின்றன. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் அதனை தடுக்கலாம். சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இவை முடிக்கு உள்ளிருந்து வலிமையை அளிக்கின்றன.
