ராஜன் குறை
சென்ற வார நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கும், இந்தியக் குடியரசு மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. ஈரான் மீது கொடூரமான ராணுவத் தாக்குதலை இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடங்கியுள்ளது. ஈரானும் திருப்பித்தாக்கி வருகிறது. தமிழ்நாட்டு ஊடகச்சூழல் வெளியே சூறாவளி வீசும்போது நாம் வீட்டுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கேரம் விளையாடுவது போல உள்ளது.
உலக அளவில் பார்க்கும்போது, இன்று தமிழ்நாடு மக்களாட்சி மலர்ச்சோலையாக உள்ளது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிக் கொண்டுள்ளார்கள். ஆளும் தி.மு.க-வின் தலைவரும், முதிர்ந்த அரசியல்வாதியுமான முதல்வர் ஸ்டாலின் தலமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒருபுறமும், அ.இ.அ.தி.மு.க-பாஜக ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து களம் காண தயாராகிக் கொண்டுள்ளன.
இதைத்தவிர தனித்தே போட்டியிட்டு வரும், தமிழ் தேசிய கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும், நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் பலரைக் கவர்ந்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவையும் களத்தில் உள்ளன. தொலைகாட்சி சானல்களில், யூடியூப் சானல்களில் எல்லாம் விவாதங்கள் அனல் பறக்கின்றன. அனைத்து அரசியல் தரப்பினரும், பத்திரிகையாளர்களும், சிந்தனையாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு, உலகில் 24 ஆவது பெரிய மக்கள் தொகுதி எனலாம். இந்திய மாநிலங்களை தனித்தனி மக்கள் தொகுதிகள் என்று கொண்டால் மொத்தம் 195 நாடுகள் மற்றும் 36 (28 மாநிலங்கள்+8 ஒன்றிய நிலப்பரப்புகள்) இந்திய மக்கள் தொகுதிகளில் 24 ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. பொருளாதாரத்திலும் அதற்கொப்ப வளர்நிலையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் மகிழ்வதற்குக் காரணம் உள்ளது.
அந்தக் காரணம் என்னவென்றால் இவ்வளவு ஆரோக்கியமான மக்களாட்சிச் சூழல் உலகின் பல நாடுகளில் இல்லை. எதேச்சதிகார அமைப்புகளே, போக்குகளே பல நாடுகளிலும் பெருகுகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களாட்சிக் குடியரசின் அடிப்படையான சட்டத்தின் ஆட்சி என்பது சுலபத்தில் பலவீனப்படுகிறது. ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரப் போக்கை கடைபிடிக்கிறார்கள்.

அது மட்டுமன்றி, சர்வதேச சட்டங்கள், நெறிமுறைகள் எல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் தகர்த்து நொறுக்கப்படுகின்றன. அமெரிக்காவை அப்பட்டமான ஏகாதிபத்திய வல்லரசாக அவர் மாற்றியுள்ளார். சென்ற வாரம் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானின் மீது தேவையற்ற ராணுவத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளார். ஈரானின் நீண்ட நாள் தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மேற்காசிய பகுதியில் எப்போது ஏவுகணைகள் தங்களைத் தாக்கும் என்று தெரியாமல் மக்கள் வான்வெளியை கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்று அந்த நாட்டில் எதேச்சதிகார ஆட்சி செலுத்திவரும், பிற நாடுகளைத் தாக்கி அப்பாவி மக்களை கொன்றொழித்துவரும் பெஞ்சமின் நெடன்யாஹுவை புகழ்ந்துவிட்டு வந்துள்ளார். அவர் தலைமையிலான ஒன்றிய அரசு, இந்தியக் குடியரசின் விழுமியங்களை முற்றாகச் சிதைத்து வருகிறது.

தலைநகர் டில்லியில் ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது அப்பட்டமான பொய் வழக்குகள் போட்டு, அமலாக்கத்துறையின் தனி அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி சிறையிலடைத்து, டில்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதை சென்ற வாரம் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கினைப் பரிசீலித்தால் இந்தியக் குடியரசின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்ள நேர்கிறது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பரிசீலிக்க நாம் மானுட வரலாறு குறித்து சுருக்கமாக சிந்தக்க வேண்டியுள்ளது. எதனால் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பெரும் முன்னேற்றம் கண்ட மானுடத்தால் அன்பும், பண்பும் மிக்க வன்முறையற்ற சகவாழ்வை மேற்கொள்ள முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி அல்லவா?
அரசியலின் இரண்டு விசைகள்
மானுட வரலாற்றில் இரண்டு விசைகள் அரசியலை வடிவமைத்து வருகின்றன. ஒன்று மைய ஈர்ப்பு விசை, மற்றொன்று மைய விலக்கு விசை. மைய ஈர்ப்பு விசை பெரும் அரசியல் சமூகங்களை உருவாக்குகின்றது. மைய விலக்கு விசை சிறிய மனிதக் குழுமங்களின் சுயேச்சையான வாழ்வை நோக்கிச் செல்கின்றது.
துவக்க கால மானுடக் குழுக்கள் வேட்டையாடிக் கொண்டும், கால்நடை வளர்த்துக்கொண்டும் நிலைத்த வாழ்வை மேற்கொள்ளாமல் இருந்த போது தங்களை சமூகமாக ஒன்று திரட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவை சுலபமாக மைய விலக்கு விசையின் பிடியில் தனித்தனி குழுக்களாக தங்களை பிரித்துக்கொண்டு வாழ்ந்தன.
விவசாயம் துவங்கிய பிறகுதான் நிலையாக ஓரிடத்தில் வாழ்வதும், உபரி உற்பத்தி மூலம் தொழில் பிரிவினையும், வர்த்தகமும், சமூக அமைப்பு தோன்றியதும் நிகழ்ந்தது. அப்போதுதான் மைய ஈர்ப்பு விசை வலுப்பெற்று, அரசர்களும், பேரரசர்களும் தோன்றத் தொடங்கினார்கள். கடவுள்களும், பூசாரிகளும், மத நிறுவனங்களும் உருவாகி சமூக ஒழுங்கமைப்புகள் கட்டமைக்கப்பட்டன.
மைய ஈர்ப்பு விசையால் பேரரசுகள் உருவாகி, உபரி சேகரிக்கப்பட்டு, மானுட ஆற்றல்கள் குவிக்கப்பட்ட போது கல்வி, கலை இலக்கியம் ஆகியவை செழித்தன; பெரும் கட்டங்கள், கோயில்கள், சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. மானுட ஆற்றல்கள் பன்மையுற்று பல்வேறு திறன்கள் பெருகின. ஆனால் அதிகாரக் குவிப்பு ஆதிக்கமாக உறைந்தபோது மைய விலக்கு விசை வலுப்பெற்று பிரிவுகள் தோன்றின.
மத நிறுவனங்கள் பிளவுபட்டு பல்வேறு பிரிவுகள் தோன்றின. பேரரசுகள் சிதைந்து பல்வேறு சிற்றரசுகள் ஆயின. விளிம்புநிலை மனிதக் குழுக்கள் பெருகி தங்கள் சுயேச்சையான வாழ்வைத் தொடர்ந்தன. மைய விலக்கு விசையும் பன்மைத்துவத்தை உருவாக்கியது. அதுவும் மனித ஆற்றல்கள் பன்மையுறவும், செழுமையுறவும் வழி வகுத்தது.
பிரச்சினை என்னவென்றால் மனிதக் குழுக்கள் ஒன்றின் உபரியை மற்றவை கவர முற்பட்டதால், போர்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. உபரி தானியங்களை, செல்வங்களை, கால்நடைகளை கவர்தல், பெண்களை, மனிதர்களை சிறைபிடித்துச் செல்லுதல் என இனக்குழு யுத்தங்கள் பெருகின. இதனை தவிர்க்க மைய ஈர்ப்பு விசையை பயன்படுத்தி அரசுகளை, பேரரசுகளை உருவாக்கும் தேவை உருவானது.
மானுடவியலாளர்கள் இந்த முரணியக்கத்தை பலவிதமாக வர்ணித்துள்ளனர். விக்டர் டர்னர் என்பார் கம்யூனிட்டாஸ், சொசைட்டாஸ் என்று இந்த இயங்களின் விளைவுகளைக் குறிப்பிட்டார். பர்மாவில் ஆய்வு செய்த எட்மண்ட் லீச், கும்சா, கும்லாவ் என்று இருவேறு வகையான சமூகத் தொகுதிகளை வர்ணித்தார். வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களை எடுத்தாலும் நாம் கூறும் மைய ஈர்ப்பு விசையும், மைய விலக்கு விசையும் தொடர்ந்து இயங்கி வருகின்றன எனலாம்.
மாறும் இறையாண்மை வடிவங்கள்
பிற விலங்கினங்களிலிருந்து மனிதன் வேறுபடுவது மனித உடல்களுக்கு சாத்தியமான கூடுதலான நினைவுசேகரத்தினால்தான். நினைவுசேகரமே தன்னுணர்வின் களம். தன்னுடைய நரம்பு மண்டலத்தால் நினைவுகளை சேகரித்துக்கொள்ளும் ஒரு உடல், தன்னை “நான்” என்று பிரித்து அறிகிறது. இந்த நான் என்பது நினைவுசேகரம் தன்னையே குறிப்பிட்டுக் கொள்வதாகும். அதனால்தான் அது நினைவுசேகரத்தை உருவாக்கிய உடலிலிருந்தே வேறுபடுகிறது. என்னுடைய உடல் என்று கூறிக்கொள்கிறது.
இப்படி தன் உடலையே பிரித்துப் பார்ப்பதால்தான் மானுட தன்னுணர்வு தன் உடலையே சிதைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வது சாத்தியமாகிறது. அதே போல பிற மனிதர்களைக் கொல்வதும் சாத்தியமாகிறது. மனிதர்களைத் தவிர பிற உயிரினங்கள் தற்கொலை செய்துகொள்வதோ, தங்கள் இனத்தையோ கொல்வதோ இல்லை. பத்து யானைகள் குழுவாகச் சேர்ந்து கொண்டு இன்னொரு பத்து யானைகளை தாக்கி அழிப்பது இல்லை. மனிதர்களுக்கு இது வெகு இயல்பாக சாத்தியமாகிறது.
அதனால்தான் மானுட அரசியலின் அடிப்படை வடிவம் எதிரி, நண்பன் என்ற முரணரசியல் அணிசேர்க்கையாக இருக்கிறது. இதனை தன் கான்செப்ட் ஆஃப் த பொலிடிகல் (Concept of the Political) என்ற நூலில் கார்ல் ஷ்மிட் சிறப்பாக விளக்கியுள்ளார். இந்த அடிப்படையில் நண்பன், எதிரி அணிசேர்க்கையின் தர்க்கம் யாரைக் கொல்லலாம், கொல்லக் கூடாது என்பதாக இருக்கிறது. அதுவே இறையாண்மையின் உள்ளடக்கமாக உள்ளது.
இரண்டு மன்னர்கள் போரிடும்போது, அவர்கள் போர்வீரர்களுக்கு இடையில் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் போரிட்டுக் கொல்ல முனைகிறார்கள். யார் சொல்லுக்கு யார் கட்டுப்படுவது என்ற அதிகாரப் போட்டியின் உச்சம், கொலையில் முடிகிறது. எந்த படையால் அதிக அழிவை நிகழ்த்தி எதிரிகளை அடக்க முடிகிறதோ அவர்கள் வென்றவர்கள் ஆகிறார்கள்.
மைய ஈர்ப்பு விசைக்கும், மைய விலக்கு விசைக்குமான முரண்பாடு பன்னெடுங்காலமாக ஓயாத போர்களாகவே இருந்தது. குறுநில மன்னர் வரி செலுத்தாவிட்டால், அதனை கப்பம் கட்டுவது என்பார்கள், பேரரசர் படையை அனுப்புவார். ஒன்று அதனை போரிட்டு முறியடிக்க வேண்டும்; அல்லது வரி கட்ட வேண்டும். இப்படியாக யார் உபரியை அதிகம் சேகரிப்பது என்பதற்கான போட்டி, ஓயாத போர்களையும், கொலைகளையும் நிகழ்த்தியபடி இருந்தது.

மக்களாட்சிக் குடியரசு என்ற புரட்சிகர சிந்தனை
பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் தோன்றியபின், ஒரு மொழியைப் பேசும் மக்களெல்லாம் தங்கள் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளும் சாத்தியம் தோன்றியது. பொதுமன்றம் என்ற சிந்தனைக்களம் உருவானது. ஒருவர் எழுதிய நூலை ஆயிரக்கணக்கானவர் படித்து விவாதிக்கும் சாத்தியம் பிறந்தது.
இந்த சிந்தனைக்களம் வலுப்பெற்றபோது மன்னர்களின் இறையாண்மை என்பது பொது ஒழுங்கை உருவாக்கத்தான் என்பது பெறப்பட்டது. அப்படி பொது ஒழுங்கை சட்டத்தின் ஆட்சியாக பொதுமன்றமே உருவாக்கினால் அரசன் என்ற தனிமனிதனிடம் இறையாண்மை தேங்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.
அப்போதுதான் மக்களாட்சிக் குடியரசு குறித்த சிந்தனைகள் மலர்ந்தன. அரசியலமைப்பு சட்டம் என்ற ஒன்றை எழுதிப் பின்பற்றினால், யார் ஆட்சி செய்தாலும் அது அந்த சட்டப்படிதான் இருக்கும் என்றால், இறையாண்மை என்பது எந்த ஒரு நபரிடத்தும் ஒப்படைக்கப்பட வேண்டிய தேவை இல்லை என்பது தெளிவானது. மொனார்க்கி என்ற மன்னராட்சியோ, ஒலிகார்க்கி என்ற குறுங்குழு ஆட்சியோ நடப்பதற்குப் பதிலாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஆட்சியை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் பிறந்தது.

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால், 1776-ஆம் ஆண்டு, மன்னரே இல்லாத அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலான மக்களாட்சி கூட்டாட்சிக் குடியரசாக அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் தோன்றின. அதற்குப் பதிமூன்று ஆண்டுகள் கழித்து பெருவெடிப்பாக நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியில் மன்னரின் தலை வெட்டப்பட்டு, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற புதிய மானுட தரிசனம் பிரகடனம் செய்யப்பட்டது.
அதன் பின்னர்தான் பல்வேறு முடியரசுகள் இணைந்து, தேசிய அரசுகளாக உருப்பெற்று, மக்களாட்சிக் குடியரசுகளாக அறிவிக்கப்பட்டன. பன்னெடுங்காலமாக பல நூறு பேரரசுகளும், சிற்றரசுகளும் ஆண்டுவந்த இந்திய நிலப்பரப்பு, காலனீய ஆட்சியில், ஒற்றை தேசமாக உருவகிக்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, 1950-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசாக மலர்ந்தது.
குடியரசுகளை சீர்குலைக்கும் ஏகாதிபத்தியமும், எதேச்சதிகாரமும்
மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக் குடியரசுகள் மலர முக்கியக் காரணம் உபரிகளை திரட்டும் புதியதொரு நடைமுறை உருவானதுதான். அதுதான் காப்பிடலிசம் எனப்படும் முதலீட்டியம். அது என்னவென்றால் மன்னர்களும், மத நிறுவனங்களும் வசூலிக்கும் வரியை, உபரியை வங்கிகள் என்ற அமைப்பிடம் கொடுத்து விட்டால், அவை அந்த உபரியை பொருளுற்பத்தியில், வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதில் ஈட்டும் உபரியிலிருந்து வட்டி வருமானத்தைத் தரும் என்பதுதான். சுருங்கச் சொன்னால் வங்கிக்கு நீங்கள் கொடுக்கும் பணம், நீங்கள் எதுவும் செய்யாமலேயே அதிகப் பணம் ஆகிவிடும்.
இந்த முதலீட்டிய உற்பத்தி முறையின் நோக்கம் மானுட வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல. உற்பத்தியையும், நுகர்வையும் பெருக்கும் வகையில் மேலும், மேலும் தேவைகளை அதிகரிப்பதுதான். உதாரணமாக தங்கள் தினசரி வாழ்வில் காபி, டீ, சக்கரை என எதுவும் பயன்படுத்தாமல் வாழ்ந்து வந்த மக்களை அவற்றை நுகரச் செய்து அவற்றை அத்தியாவசிய தேவைகளாக மாற்றியது. புகையிலையை பயன்படுத்தாமல் வாழ்ந்த மக்களை சிகரெட், பீடி, குத்கா என்று பல்வேறு புகையிலைப் பொருட்களை பயன்படுத்த வைப்பது.
இவ்வாறான தேவையற்ற நுகர்வுகள் பெருகினாலும், மற்றொரு புறம் பொதுவான மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது; அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு புதிய வாழ்வியல் வசதிகள், இன்பங்கள் பெருகியது முதலீட்டிய உற்பத்தி முறையை பலரும் விரும்புவதற்குக் காரணம் ஆகிறது. தோரோ போன்ற சிந்தனையாளர்கள், காந்தி போன்ற தலைவர்கள் நுகர்வுகள் குறைந்த இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையே சிறந்த து என்பதை வலியுறுத்தினாலும் நுகர்வுச் சமூக வேட்கைகளின் பெருக்கமே வாழ்வை வடிவமைத்து வருகிறது.
இந்த முதலீட்டிய உற்பத்தி முறையில், உபரிக் குவிப்பு போட்டி முன்னைவிட வலுவடைந்தது. மக்களாட்சிக் குடியரசுகளாக உருவான தேசிய அரசுகள் பொருளாதாரப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று போரிடத் துவங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கொலைக்கருவிகளின் உற்பத்தியையும் நவீனப்படுத்திப் பெருக்கியது. இது இறுதியில் அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவுக் கருவிகளை உற்பத்தி செய்யும் சூழ்நிலையை உருவாக்கியது.
இந்த முதலீட்டிய உற்பத்தி முறையின் அழுத்தங்கள் மக்கள் வாழ்வின் மீது அரசின் கட்டுப்பாட்டை பன்மடங்கு அதிகரித்தன. தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருந்தாலும், அந்த பிரதிநிதிகள் எல்லோரும் முதலீட்டிய வளர்ச்சியின் விதிகளின்படியே இயங்க வேண்டிய தேவை உருவானது. முதலீட்டிய உபரி அதிகரிக்க வேண்டுமென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க வேண்டும் என்ற தேவையும் உருவானது.
சமூக ஏற்றத்தாழ்வை அனைவரையும் ஏற்கச் செய்யவேண்டுமென்றால் மக்களாட்சி நடைமுறைக்குள் எதேச்சதிகாரம் வலுப்பெறத்தான் செய்யும். முதலீட்டியத்திற்கு முழுமையாகச் சேவகம் செய்யும் தலைவர்கள் ஊடகங்களின் உதவியுடன் எதேச்சதிகாரிகளாக வடிவெடுப்பார்கள். அவர்கள் சட்ட த்தை தங்கள் விருப்பப்படி வளைப்பார்கள்.

இப்படி உருவாகும் உள் நாட்டு ஏதேச்சதிகாரிகள், சர்வதேச உறவுகளில் ஏகாதிபத்திய போக்கு வலுவடைவதை ஆதரிப்பார்கள். இன்று மீண்டும் உலக ஏகாதிபத்தியவாதியாக மாறியுள்ள டொனால்ட் டிரம்ப்பை எந்த அளவு நரேந்திர மோடி ஆதரித்தார், அவரை அழைத்து பிரம்மாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை நட த்தினார் என்பதையெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நிலைக்கு மாற்று என்ன என்ற கேள்வி எழும். அதற்கான மாற்று என்பது சோஷலிசம் என்ற சமுதாய நோக்கு பொருளாதாரத்தை உருவாக்குவதுதான். இந்த பூமியின் வளங்களெல்லாம் அனைத்து மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பொதுவானவை என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும். முதலீட்டியக் குவிப்பு போட்டி குறைக்கப்பட்டு பகிர்தலும், கூட்டுறவும் பெருக வேண்டும். நுகர்வுப் பெருக்கம் தவிர்க்கப்பட்டு இயற்கை வளங்கள் பேணப்பட வேண்டும்.
அவ்வாறெல்லாம் நடக்க உறுதுணையாக மைய விலக்கு விசைகள் ஊக்குவிக்கப்பட்டு கூட்டாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதிகாரம் அனைத்து மட்டங்களிலும் பரவலாக்கப்பட்டு, சுயாட்சி கொண்ட தலமட்ட சமூகங்கள் பெருக வேண்டும். ஆதிக்க வடிவங்கள் இறுகிப்போக விடக்கூடாது. அதிகாரக் குவிப்பும், முதலீட்டியக் குவிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற புரிதல் வேண்டும்.
இயற்கையோடு இயைந்த பன்மைத்துவ வாழ்வியல் நெறிகளும், நுகர்வுக் குறைப்பும், தல மட்ட சுயாட்சிகளின் தொகுப்பாக உலகக் கூட்டாட்சியும் உருவாக வேண்டும். மானுட சுயத்தின் தற்காமும், அதனால் பெருகும் வன்முறையும் தவிர்க்கப்பட கல்வி அறிவும், சிந்தனை முதிர்ச்சியும் பெருக வேண்டும்.
இதெல்லாம் நடக்குமா, எந்த அளவு நடக்கும் என்று தெரியாது: ஆனால் மானுடம் அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமானல், இத்தகைய சாத்தியங்களை உருவாக்க போராடித்தானாக வேண்டும். இது கத்தியைத் தீட்டும் போரல்ல; புத்தியைத் தீட்டும் போர். பகுத்தறிவின் போர். சுயமரியாதையின் போர்.
பகுத்தறிவற்ற கடவுள் பற்றால் நல்லதொரு உலகை உருவாக்க முடியவில்லை. கடவுளையும் பகுத்தறிவின் வடிவமாக மாற்றினால்தான் வெற்றிபெற இயலும். அத்தகைய சிந்தனையை உருவாக்கும் ஆற்றல் வள்ளுவரும், பெரியாரும் இயங்கிய தமிழ்மொழிக்கு இருக்குமென்றே தோன்றுகிறது. அதனால்தான் எதேச்சதிகாரமற்ற மக்களாட்சிக் களத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது; மக்கள் நல ஆட்சியை உருவாக்குகிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
