அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அச்சுறுத்தும் புதிய புயல் சின்னம், இன்று (நவம்பர் 4) மேலும் வலுவடைந்து வங்கக் கடலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள புயல் எச்சரிக்கையால் தீவுவாசிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கிழக்கு-மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, இன்று (நவம்பர் 4) மேலும் வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் மியான்மர்-வங்கதேசம் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு அந்தமான் கடற்பகுதிகளில் கடுமையான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 3 முதல் நவம்பர் 5 வரையிலான நாட்களில் வடக்கு அந்தமான் கடலில் மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், சில சமயங்களில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்படும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 7 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கான மிக முக்கிய எச்சரிக்கையாக, நவம்பர் 3 முதல் நவம்பர் 5 வரை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், படகு உரிமையாளர்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிலைமை சீரடையும் வரை கடல் சார்ந்த நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடற்கரைகள், நீரோடைகள் மற்றும் அபாயகரமான நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
