ஜெர்சி பட இயக்குநர் கெளதம் டின்னனுரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஷே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கிங்டம். நாகவம்சியின் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கிங்டம் படத்தின் ப்ரொமோசன் நிகழ்ச்சி சென்னையில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
அப்போது நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “வணக்கம் சென்னை. உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கிங்டம் பட வெளியீட்டிற்காக இங்கே வந்திருக்கிறோம்.
இப்படத்தின் இயக்குநர் கெளதமின் ‘ஜெர்சி’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ‘கிங்டம்’ படத்தின் கதையை அவர் சொன்னதும், இதனை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உறுதியாக பண்ண வேண்டும் என முடிவு செய்துவிட்டோம்.
இப்படத்தின் கதைக்களத்தை ஆந்திரா, சென்னை மற்றும் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில் நடப்பதாக அமைத்திருக்கிறோம். நம் அனைவருக்கும் தனித்துவமான, சில ஒற்றுமையான கலாச்சாரம் உள்ளது. ரஜினி சார் திரைப்படங்களில் வருவதைப் போல, இந்தத் திரைப்படமும் ஒரு கிளாசிக் ஆக்ஷன் டிராமா கதையைக் கொண்டது. அதனால் தான் இப்படத்தை தமிழ், தெலுங்கு தயாரிக்க முடிவு செய்தோம்.
ஹைதராபாத்துக்குப் பிறகு ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப் பணிகளுக்காக நான் இங்குதான் வந்திருக்கிறேன். உங்களின் அன்பு எனக்கு மிகவும் முக்கியம். என்னுடைய ‘குஷி’ திரைப்படத்தையும் இங்கு வெற்றியடையச் செய்த மக்களுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
நான் இந்த மேடையில் இரண்டு நபர்களுக்கு முக்கியமாக நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு பெரிய நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
சூர்யா அண்ணா இப்படத்தின் டீசருக்கு டப் செய்ய வேண்டும் என இயக்குநர் கெளதம் விரும்பினார். எனக்கு இதுபோன்ற வேலைகளுக்காக மற்றவர்களிடம் பேசுவதை நான் விரும்பமாட்டேன்.
பிறகு சூர்யா அண்ணாவுக்கு ஃபோன் செய்து, ‘அண்ணா, எனக்கு ஒரு உதவி மட்டும் தேவைப்படுகிறது. தயவு செய்து அதற்கு ‘நோ’ சொல்லாதீர்கள்,’ என்றேன். அவரும், ‘இல்லை, இல்லை, நீங்கள் என்ன விஷயம் என்பதைச் சொல்லுங்கள்,’ என்றார்.
பிறகு நான், ‘இப்படத்தை தமிழிலும் நான் வெளியிட விரும்புகிறேன். என்னுடைய இயக்குநர் உங்களுடைய குரல் இந்த டீசருக்கு வேண்டும் என விரும்புகிறார். அதைச் செய்து தர முடியுமா?’ என்றேன்.
‘நிச்சயமாக, நான் செய்கிறேன்,’ எனக் கூறி பேசிக் கொடுத்த சூர்யா அண்ணாவுக்கு நன்றிகள்! எனக்காக இதை நீங்கள் செய்ததில் மகிழ்ச்சி. அவர்தான் ‘கிங்டம்’ படத்தின் டீசரையும் முதலில் தமிழில் வெளியிட்டார்.
அனிருத் படத்திற்கு ஒரு புதிய உயிர் கொடுத்திருக்கிறார். நேற்று ஹைதராபாத் வந்தார். இன்று சென்னைக்கு வந்து படத்தின் கடைசி கட்ட பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது, அனிருத்தை கடத்திக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தேன். அதற்கான தருணம் அமைந்து, நாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ஒன்றாகப் பணிகளை கவனித்திருக்கிறோம்.
நான் இங்கு சென்னைக்கு வந்து அவருடைய ஸ்டுடியோவில் ஜாலியாக இருந்தேன். இப்போது அவரை கண்டிப்பாக என்னுடன் கடத்திச் செல்ல விரும்புகிறேன்.
கிங்டம் படம் குறித்து அனிருத் கூறி வரும் பாசிடிவ் ரிவ்யூஸ் நான் பேசுவதை விடவும் அதிகமாக பரவி வருகிறது. அதுவே இந்த படத்திற்கான வெற்றி என நினைக்கின்றேன்” என விஜய் பேசினார்.