முதல்நாளே இளையராஜா ஆப்சென்ட்! பி.டி.உஷாவும் வரவில்லை!

Published On:

| By Prakash

இன்று (ஜூலை 18) தொடங்கிய நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே மாநிலங்களவை நியமன எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா, பி.டி.உஷா ஆகிய இருவரும் பதவியேற்கவில்லை.

டெல்லியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கியது. தமிழகத்தில், காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும் காலியாக இருந்த 57 எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்களான கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றுக்கொண்டனர்.

அதுபோல் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக இளையராஜா, பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜா மற்றும் கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் இன்று பதவியேற்கவில்லை. மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இளையராஜாவை அழைத்தபோது, மற்ற உறுப்பினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

ஆனால், அவர் வரவில்லை. ’ஹி ஹேஸ் நாட் கம்’ என்ற பதில்தான் வந்தது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இளையராஜா சென்றிருப்பதால்தான் அவரால், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுபோல், பி.டி.உஷாவும் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே இளையராஜா, பி.டி.உஷா ஆகிய இருவரும் ஆப்சென்ட் ஆகியிருப்பது பிஜேபி தரப்புக்கு வருத்தத்தை உருவாக்கியிருக்கிறதாம்.

  • ஜெ.பிரகாஷ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share