நேரில் சந்தித்த இளையராஜா… சிம்பொனி நோட்ஸ் கேட்ட மோடி

Published On:

| By christopher

ilaiyaraaja met pm modi at delhi

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை இன்று (மார்ச் 18) நேரில் சந்தித்து இளையராஜா வாழ்த்து பெற்றுள்ளார். ilaiyaraaja met pm modi at delhi

திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா, கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.

அங்குள்ள ஈவெண்டிம் அப்பல்லோ அரங்கத்தில் 3500 ரசிகர்கள் முன்னிலையில் தான் இயற்றிய ’வேலியண்ட் நம்பர் 1’ என பெயரிடப்பட்ட மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை அரங்கேற்றம் செய்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சிம்பொனி அரங்கேற்றம் செய்வதற்கு முன்னதாக இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜா, முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்திருந்தார்.

மோடியுடன் சந்திப்பு – மறக்க முடியாது! ilaiyaraaja met pm modi at delhi

இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற இளையராஜா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தனது வேலியண்ட் சிம்பொனியின் குறிப்புகளை காட்டி மோடிக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியுடனான ஒரு மறக்கமுடியாத சந்திப்பு இது. எனது சிம்பொனி “வேலியண்ட்” உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் நெகிழ்ச்சியடைந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கினார்! ilaiyaraaja met pm modi at delhi

அதே போன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்யசபா உறுப்பினர் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி. சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை வழங்கியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது.

இந்த மகத்தான சாதனை இளையராஜாவின் இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது. உலக அளவில் அவர் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.“ என மோடி புகழாராம் சூட்டியுள்ளார்.

மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பங்கேற்ற எம்.பி இளையராஜாவுக்கு, மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share