பாலியல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மாணவருக்கு மீண்டும் வகுப்புகளில் பங்கேற்க ஐஐஎம் கொல்கத்தா அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி ஐஐஎம் கொல்கத்தா விடுதியில் பரமானந்த் மகாவீர் தோப்பண்ணவர் என்ற மாணவர் குடி போதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து மாணவர் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது கவுன்சிலிங் விவகாரங்களுக்காக தன்னை பரமானந்த் அழைத்தகாவும், அங்கு சென்ற போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை விசாரணைக்கு அந்த பெண் முழு ஒத்துழைப்பு தரவில்லை. அதே சமயம் இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜாமினில் வெளியில் வந்த பரமானந்த் வகுப்புகளில் கலந்துகொள்ள நிறுவனத்தின் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பித்தார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கல்வி கவுன்சில் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் பரமானந்த் ஜூலை 28 முதல் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், கொல்கத்தா காவல்துறை சிறப்பு விசாரணை குழு விசாரணையை முடிக்கும் வரை அவர் வளாக விடுதியில் தங்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.