இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளில் இருந்து இதுவரை 16 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என அறியப்படுகிறார். மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) மற்றும் அதன் பதிவேட்டின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு எதிராக இவர் தாக்கல் செய்த வழக்கில் இருந்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி அலோக் வர்மா இந்த வாரம் விலகியுள்ளார். ஏற்கனவே நீதிபதி ரவீந்திர மைதானி சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கில் இருந்து விலகினார்.
பிப்ரவரி 2024 இல், நீதிபதி மனோஜ் திவாரி சதுர்வேதியின் மத்திய பிரதிநிதித்துவம் தொடர்பான வழக்கிலிருந்து விலகியிருந்தார். மே 2023 இல், நீதிபதி ராகேஷ் தப்லியால் சதுர்வேதியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், சதுர்வேதியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான வழக்கில் இருந்து சிஏடி உறுப்பினர்கள் ஹர்விந்தர் ஓபராய் மற்றும் பி. ஆனந்த் ஆகியோர் விலகினர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நைனிடாலில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ACJM), நேஹா குஷ்வாஹா, புது டெல்லியில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் (CAT) முதன்மை பெஞ்சின் உறுப்பினர் (நீதித்துறை) மணீஷ் கார்க் மீது சதுர்வேதி தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை விசாரிப்பதில் இருந்து விலகினார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், யு.யு.லலித் ஆகியோரும் சதுர்வேதி தொடர்ந்த வழக்கில் இருந்து விலகியிருக்கின்றனர்.
இப்படியாக இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள், இரண்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் தலைவர் உட்பட 8 சிஏடிஉறுப்பினர்கள் என மொத்தம் 16 பேர் விலகியிருக்கின்றனர்.
2007 முதல் 2012வரை ஹரியானா வனத்துறையில் நிகழ்ந்த பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் ஐஎப்எஸ் சஞ்சீவ் சதுர்வேதி.
2013ல் ஹரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்துதான் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.
ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.