டிரம்ப் பொய்யர் என்று இந்த அவையில் சொல்ல மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி ஆளும் கட்சியை கடுமையாக தாக்கி பேசினர்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “1971 போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் ராஜ்நாத் சிங் ஒப்பிட்டுப்பார்த்தார். 1971ல் அரசியல் உறுதி இருந்தது. இந்தியாவை நோக்கி படைகள் வரும்போது, அப்போதைய பிரதமர் (இந்திரா காந்தி) ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
இந்திரா காந்தி ஜெனரல் மானெக்ஷாவிடம் 6 மாதங்கள், 1 வருடம் என உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சுதந்திரம் கொடுத்ததன் விளையாக 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
அதையும், இதையும் ஒப்பிடுவதா. இந்திரா காந்திக்கு இருந்த 50 சதவிகித தைரியம் கூட மோடிக்கு இல்லை.
ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கியது என்றும், 22 நிமிடங்கள் நீடித்தது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். தொடர்ந்து 1.35 மணிக்கு, நாங்கள் பாகிஸ்தானை அழைத்து, ராணுவம் அல்லாத இலக்குகளைத் தாக்கியுள்ளோம். மோதலை தீவிரப்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று பாகிஸ்தானிடம் தெரிவித்திருந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலையும் சொன்னார். இப்படி சொன்னது அவருக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.இது பாகிஸ்தானிடம் நாம் சரணடைந்ததற்கு ஒப்பானதாகும்.
பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? இந்திய விமானப்படையின், ராணுவத்தின் கையை கட்டிப்போட்டது ஏன்? பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று முன்கூட்டியே சொன்னது ஏன்?
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை எந்த நாடும் கண்டிக்கவில்லை. தீவிரவாத தாக்குதலுக்குதான் கண்டனம் தெரிவித்தன.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது
போர் தொடர்பான செயற்கைகோள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து சீனா உதவியிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவமும் சீன ராணுவமும் ஒரே ராணுவம் போல் செயல்படுகின்றன.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தாமே காரணம் என 29 முறை சொல்கிறார் அமெரிக்கா அதிபர் டிரம்ப். இந்திரா காந்தியைப் போல உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த அவையில் நின்று டிரம்ப் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி சொல்லட்டும்.
பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, டொனால்ட் டிரம்ப்புடன் விருந்து சாப்பிடுகிறாரே.. பிரதமர் மோடியால், டிரம்ப்பிடம் இதை கேள்வி கேட்க முடிந்ததா?
பயங்கரவாதிகளைப் பற்றி கேள்வி எழுப்பினாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என முத்திரை குத்துகின்றனர் தன்னுடைய இமேஜைப் பாதுகாக்க ராணுவத்தைப் பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி. இப்படி பாதுகாப்புப் படையினரை மோடி பயன்படுத்துவது தவறானது- அபாயகரமானது.
ஆபரேஷன் சிந்தூரின் பெருமையை மட்டும் ஏற்க விரும்புகிறார் மோடி. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதற்கு முன்வரவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது நமது நாட்டின் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியிருக்கின்றன. இது விமானப் படை மீதான தவறு இல்லை; மத்திய அரசின் தவறுதான். நமது விமானப் படையினரிடம், பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது தவறானது” என்று கூறினார்.