தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரச்சார கூட்டங்களில் தவெக கொடிகள் தென்படுவது வாடிக்கையாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் தவெக கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 11) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அவர், “கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. இன்னொரு கட்சியை தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் இப்படியொரு கொடுமையான துயர சம்பவம் நடந்துள்ள நிலையில், கூட்டணி குறித்து பேசுவது தர்ம சங்கடத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது.
தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
விஜய் தனது தலைமையில் தான் கூட்டணி என மதுரை மாநாட்டிலேயே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எடப்பாடியின் இந்த நடவடிக்கை, விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அதிமுக பலவீனமாகிவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். தவெக தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டார். அதன்பின்னர் எஸ்டிபிஐ மாநாட்டில் கலந்துகொண்டு என்னவெல்லாம் பேசினார்.
எடப்பாடிக்கு துரோகத்தை தவிர வேறு ஒன்று கிடையாது. விஜய் கூட்டணி வருவார் என்றால் பாஜகவை கழற்றி விட தயாராக உள்ளார். ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவாரா என்று தெரியாது.
திரையுலகில் உச்சநடிகராக இருந்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. எப்போது எடப்பாடியை தங்கள் கூட்டணியை சேர்த்தார்களோ அப்போது முதல் அந்த கூட்டணி பலமிழந்து வருகிறது. இக்கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும். இதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என டிடிவி தினகரன் பேசினார்.