அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து பயணம் செய்தால் 7 முறை தேர்தலில் ஜெயித்த கே.ஏ.செங்கோட்டையனுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நாளை செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேச இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசப் போகிறாரா? அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற பல்லவியை பாடுவாரா? அதிமுகவில் தனி அணியை அறிவிப்பாரா? என செங்கோட்டையன் குறித்து பல யூகங்கள் வலம் வருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கோபிச்செட்டிபாளையத்தில் 7 முறை வெற்றி பெற்றவர் கே.ஏ. செங்கோட்டையன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அக்கட்சியிலேயே நீடித்தால் அதே கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2026-ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடும் நிலைமை ஏற்படும்.
அதிமுக என்கிற கட்சி எங்கே இருக்கிறது? என்ற நிலைமை வந்துவிட்டது. இந்து முன்னணியின் மாநாட்டில் எல்லாம் கலந்து கொள்கின்றனர் அதிமுக தலைவர்கள்; அதிமுகவைச் சேர்ந்த ஒரு தலைவர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலேயே கலந்து கொள்கிறார்; மற்றொருவர் பாஜகவுடன் கூட்டணியை ஜெயலலிதா முறித்ததே வரலாற்றுப் பிழை என்கிறார்.
உங்க பின்னால் ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஒரு தலைவரா? இவரை எல்லாம் ஒரு தலைவராக நீங்க ஏற்றுக் கொண்டதே அசிங்கம். இவ்வாறு பெங்களூர் புகழேந்தி கூறினார்.